புலியின் தொழிற்சாலை

ஒரு காட்டில் புலி ஒன்று ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தது. அங்கே ஒரு எறும்பு வேலைக்கு சேர்ந்தது. எறும்பு சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு போய்விடும். புலியாருக்கு ஏக சந்தோஷம். கணிசமான லாபமும் கிடைத்தது. எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. திடீரென புலியாருக்கு ஒரு யோசனை வந்தது. எறும்பு தனியாகவே வேலை செய்கிறதே! எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு மேலாளரை நியமித்தால் உற்பத்தி அதிகமாகுமே என்று ஒரு அனுபவசாலியான தேனியை கொண்டு வந்தது.

அந்த தேனி, “எறும்பை அதன் போக்கில் விட முடியாது, அதற்கு முறையான கால அட்டவணை போட்டுக்கொடுத்தால் இன்னும் கூடுதலாக வேலை வாங்கலாம். அதற்கு நிறைய உழைக்க வேண்டும். எனக்கு ஒரு காரியதரிசி தேவை என கேட்டது. புலிக்கு சந்தோஷம். தேனி நன்றாக யோசிக்கிறதே, இது எனக்கு தோன்றவில்லையே? என நினைத்து ஒரு முயலை நியமித்தது. அதோடு தனக்கும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக்கொள்ள ‘இனிமேல் எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து வரைபடமும் அட்டவணையும் கொடுக்க வேண்டும்’ என சொல்லியது.

‘அதற்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர் எல்லாம் வேண்டுமென தேனி கேட்க அவையும் வந்திறங்கியது. அவற்றை கையாள ஒரு பூனை வந்தது. இவர்களின் ஏகப்பட்ட கெடுபிடிகளால் விரக்தியடைந்த எறும்புக்கு வேலையில் தொய்வு ஏற்பட்டது. உற்பத்தி குறைந்தது. புலியார், ‘எல்லாம் சரியாக இருந்தும் ஏனிப்படி நடக்கிறது? எறும்புக்கு வேலையை விளக்க குரங்கு ஒன்றை தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்தது. இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப திட்டமிட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு, நஷ்டத்தில் இயங்கியது தொழிற்சாலை.

‘நஷ்டம் ஏற்பட்டதை ஆராய ஆந்தையை நியமித்தது புலி. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் “தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருப்பதே இதற்கு காரணம். யாரையாவது வேலையை விட்டு எடுத்தால் நிலைமை சீராகும்” என்றது. “யாரை எடுக்கலாம்” என புலி கேட்க, “அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான்” என சொன்னது ஆந்தை.

இப்படித்தான் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.