இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஐநா சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பெண்கள், “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும் உள்ளாட்சியில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடினர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதர் ருசிரா கம்போஜ் கூறியது: உள்ளாட்சியில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பில் 1992-ல் கொண்டுவரப்பட்டது இந்திய அரசியலின் மைல்கல்லாகும். இதன் மூலம் அடித்தட்டு மக்களின் சமூக அரசியலில் பெண்கள் முடிவெடுக்கும் சக்தியாக உருவெடுக்கும் அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. அந்த நிலையிலிருந்து மென்மேலும் வளர்ந்து இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மொத்தமுள்ள 30 லட்சம் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெண்கள் பழங்கால கட்டுப்பாடுகளைத் தகர்த்து தங்கள் சமூகத்தின் கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புரட்சி படைத்து வருகின்றனர். இருப்பினும் பல சவால்களை இன்றும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இத்தகைய தடை கற்களை தகர்த்து பாலின சமத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தக் கூடுதல் சட்ட பாதுகாப்பும், வலுவான திறன் மேம்பாட்டு முயற்சிகளும், அரசு மற்றும் தனியாரின் கூட்டுழைப்பும் அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.