புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதானி குழுமம் சாதனை

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு தற்போது 10 ஆயிரம் மெகாவாட்ஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 10 ஆயிரம் மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை எட்டும் முதல் நிறுவனமாக அது உருவெடுத்துஉள்ளது.
தற்போது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 7,393 மெகாவாட்ஸ் சோலார், 1,401 மெகாவாட்ஸ் காற்றாலை, 2,140 மெகாவாட்ஸ் காற்றாலை – சோலார் ஹைப்ரிட் என மொத்தமாக 10,934 மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 58 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்றும் ஆண்டுக்கு 2.1 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கவுதம் அதானி நேற்று கூறுகையில், “இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பில் 10 ஆயிரம் மெகாவாட்ஸ் கட்டமைப்பை எட்டும் முதல் நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம். பத்தாண்டுக்குள் இந்தக் கட்டமைப்பை எட்டியுள்ளோம்.
எரிசக்தி சார்ந்து இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற அதானி குழுமம் எத்தகைய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது சான்றாகும். 2030-ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் மெகாவாட்ஸ் கட்டமைப்பை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.