வரி வட்டத்துக்குள் அநேகமாக அனைத்துத் தரப்பினரும் வந்துவிட்டார்கள் என்று கூறலாம். வரி வலை விரிவடைந்திருக்கிறது என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். அதுவே ஜி.எஸ்.டி.யின் உடனடிப் பெரும் நல்ல விளைவு.
ஜி.எஸ்.டி. நிர்வாக கவுன்சில் நாட்டில் 1,200-க்கும் மேற்பட்ட பொருள்களை – 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற வரி வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறது. நாட்டிலுள்ள மொத்த பொருள்களில் 81 சதவீத அளவு இந்த வரி விதிப்பு முறைக்குள் வந்துவிட்டன. பெட்ரோலியம் பொருள்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வரவில்லை.
வரி விகிதம் குறைக்கப்பட்ட பொருள்களுக்குத் தொடர்ந்து பழைய – கூடுதல் விலையை வைத்து – விற்பனை செய்து – கொள்ளை லாபம் அடிக்க முயல்பவர்களை தண்டிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றும் கூடவே இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் சட்டம் குறுகிய காலத்துக்குதான் பயன்படும் என்று நிச்சயமாகக் கூறலாம். வரி விகித வித்தியாசத்தைக் காரணம் காட்டி நுகர்வோரை நீண்ட காலத்துக்கு ஏமாற்றிவிட முடியாது.
ஜி.எஸ்.டி. அமலான அன்றைக்கே மாருதி சுஸகி, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற வாகனத் தயாரிப்பாளர்களும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற நுகர்வோர் பொருள் தயாரிப்பாளர்களும் விலைக் குறைப்பை அறிவித்துவிட்டன.
ஒரு கார் உற்பத்தியாகும் மாநிலம் அல்லாமல், அது விற்பனையாகும் மற்றொரு மாநிலத்தில் அதன் மீது வரி விதிப்பு நிகழ்கிறது. இது தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு நஷ்டத்தை அளிக்கக் கூடியது என்கிற அச்சத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்குப் போதிய இழப்பீடு அளிக்க ஜி.எஸ்.டி. சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் பொருள்கள் சரக்கு – சேவை வரி வலைக்குள் கொண்டு வரப்படவில்லை. “அவற்றின் விலையையும் வரியையும் எப்போது வேண்டுமானாலும் உயர்த்தலாம், அது மத்திய அரசின் தந்திரம்” என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் நடைபெற்று வருவது வேடிக்கை. காரணம், பெட்ரோலியம் பொருள்களை சரக்கு – சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரக் கூடாது என்று மாநிலங்கள்தான் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இதுபோல பல அரசியல் மாய வேடிக்கைகள், அரசியல் ஆதாயத்துக்காகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
இது வரை கணக்கு- வழக்கு எதையும் கடைப்பிடிக்காதவர்களும் இனி ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது. யதார்த்தத்தில், அத்தியாவசியப் பொருள்களை விற்போர் கூட, வரித் தவிர்ப்பு – வரி ஏய்ப்பு செய்து நிழல் உலகில் இருந்து வந்த நிலை போய், வரி அளிப்பவராக மாறும் நிலை தோன்றியுள்ளது. நாட்டின் நியாயமான வருவாய் சாத்தியமாகியிருக்கிறது என்று கூறலாம்.
ஒரு விசையைத் தட்டிவிட்டதும், மின் விளக்கு ஒளிர்வது போல, குழாய் மூடியைத் திருகியதும் அதிலிருந்து நீர் கொட்டுவதுபோல வரி கொட்டப் போவதில்லை. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதமும், வரி வசூலும் குறையும் என்று கூறப்படுகிறது. காரணம், ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தாலும், இதனைப் பின்பற்ற நிறுவனங்களுக்கு 2 மாத அவகாசம் தரப்பட்டுள்ளது. இது நிதி ஆண்டு நிறைவு வரை நீளக் கூடும். அடுத்த நிதி ஆண்டுதான் முழுமையாக இந்த வரி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறலாம். எனவேதான், ஜி.எஸ்.டி. மூலம் வரி வசூல் எவ்வளவு கிடைக்கும் என்ற தொகையைக் குறித்து கற்பனையான எண்ணிக்கைகூட வெளிவரவில்லை.
இனி வரி வசூல் சீராக இருக்கும் என நம்பலாம். வரி ஏய்ப்பு, வரித் தவிர்ப்பு வாய்ப்புகள் குறையும். வரி அளிப்பு உறுதி செய்யப்படும் என்பது இந்தச் சட்ட நடைமுறையின் மிக முக்கியமான பலன். அதாவது வரிக்கான வலை விரிவடைந்திருக்கிறது. எனவே வரி வருவாய் உயர்வது உறுதி. அதன் பயனாக நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் – இதில் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை “நாட்டின் பொருளாதார விடுதலை’ என்று கூறப்படுகிறது. இது வெறும் வரி விதிப்பு முறை மட்டுமல்ல. நம் நாட்டைப் பொருத்தவரை, சமூக சீர்திருத்தத்துக்கு இணையானது என்று கூறலாம். எல்லா சமூக சீர்திருத்த நடவடிக்கையைப் போல சில காலத்துக்கு சில பிரிவினரிடையே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். பொது நன்மை தெளிந்து வரும்போது, அனைவரும் ஏற்கும் நிலை வரும்.
(தினமணியில் டி.எஸ்.ரமேஷ் கட்டுரையிலிருந்து)