புதிய கல்விக்கொள்கையை பற்றி ஒவ்வொரு தாயும் அறிந்து கொள்ள வேண்டும். அங்கன்வாடி முதல் கல்லூரி வரை ஒரு குழந்தையின் கல்வியை ஒரு தாய்தான் பின் தொடர்கிறாள். எனவே இந்த புதிய கல்விக்கொள்கையை பற்றி இணையத்தில் தேடிப்படியுங்கள், தெரிந்துகொள்ளுங்கள். யாரும் குறிப்பாக திராவிடம் சார்ந்த அரசியல்வாதிகள் சொல்வதை நம்பாதீர்கள். இவர்கள் வழக்கம் போல மாநில உரிமை பறி போகிறது, ஹிந்தி திணிப்பு என புலம்பத்தான் செய்வார்கள். அதை நம்பிவிடாதீர்கள். 34 ஆண்டுகள் கழித்து நம் பிள்ளைகளுக்கு ஒரு உலகத்தர கல்வி கிடைக்கப்போகிறது.
முதலில் 10+2 என இருந்த படிப்பு தற்போது 5+3+3+4 என இருப்பது பிள்லைகளின் படிப்பு மேம்பட மிகவும் வசதியானது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுதேர்வு என்பது பிள்ளைகளின் கல்வி கற்கும் தரத்தை மட்டும் அல்ல, போதிக்கப்படும் கல்வியின் தரத்தை பற்றி மதிப்பிடவும் உதவும். முன்பு 8ஆம் வகுப்பு வரை இருந்த கட்டாயக்கல்வி தற்போது 12ஆம் வகுப்பு வரை கட்டாயம் ஆகிறது. பணக்கார பிள்ளைகளை போல மும்மொழிகளை நம் பிள்ளைகள் கற்பது நல்லது தானே. நம் தமிழகத்தில்கூட பல மும்மொழி பள்ளிகள் உள்ளன ஆனால் அவை பெரும்பாலும் அரசியல்வாதிகள் நடத்தும் பெரிய தனியார் பள்ளிகளாகவே உள்ளன. அரசு நடத்தும் பல உருது பள்ளிகளிலும் மும்மொழி கல்விதானே கற்ப்பிக்கப்படுகிறது, நமக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? இதை நாம் உணர வேண்டும்.
இந்த மும்மொழிக் கொள்கையில் தாய்மொழிக்கே முதலிடம். ஐந்தாவது வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமும் கூட. தாய்மொழியை தவிர்த்து பிராந்திய மொழிகளில் எதாவது ஒரு செம்மொழியையும் கற்க வேண்டும். அது தெலுகு, கன்னடம், மலையாளம் என எதுவாக இருந்தாலும் சரி. இதைத்தவிர ஆங்கிலம் போன்ற ஒரு அன்னிய மொழியும் உண்டு. இதில் ஹிந்தி திணிப்பும், சமஸ்கிருத திணிப்பும் எங்கிருந்து வந்தது? மீண்டும் சொல்கிறேன் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள். தீர விசாரித்து உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தெரியட்டும் இது 1980 அல்ல 2020, மக்கள் சிந்திக்க துவங்கிவிட்டனர் என்று.
இந்த புதிய கல்விக் கொள்கையில் மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் அல்லது ஒப்புவிக்கும் கல்விமுறை இனி இல்லை. புதிய கல்விக்கொள்கையில் கற்ற கல்வி வாழ்க்கைக்கு பயன்படும் விதத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. எனவே ஏட்டு சுரைக்காயும் இனி கறி சமைக்க உதவும். மார்க் அடிப்படையில் மட்டுமே என இல்லாமல் இனி மாணவர்கள் தங்களுக்கு பிடித்த குரூப்பை தெர்ந்தெடுத்து படிக்கலாம். கல்லூரி படிப்பும் அப்படிதான். தனக்கு பிடித்ததை படிக்கும் வாய்ப்பு இனி ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டு படித்த்தும் அதற்கேற்ற சான்றிதழ் கிடைக்கும் என்பதால் எதாவது காரணத்தினால் இடைநிற்றல் ஏற்பட்டாலும் சான்றிதழை கொண்டு வேலை தேட முடியும். இது சட்டம் மற்றும் மருத்துவ படிப்பிற்கு மட்டும் பொருந்தாது.
இந்த புதிய கல்விக்கொள்கை ஏதோ சிலர் ஒரு அறையில் அமர்ந்து தயரித்தது அல்ல. 676 மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து விவாதித்து தயாரிக்கப்பட்டது.
கல்வி என்பது நாம் நம் அடுத்த தலைமுறைக்கு தரும் சொத்து. அதை நல்லதாக கொடுக்க ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இது வெளி நாடுகளுக்கு இணையான கல்விமுறை. இந்த நல்ல வாய்ப்பை இழந்துவிடாதீர்கள். இந்த புதிய கல்விக்கொள்கையை தமிழக திராவிட அரசியல் கட்சிகளை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்களும் இதற்கு அமோக ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாமும் புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்போம். நம் சந்ததிகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
மைதிலி சீனு