”வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகள்:
* பெரிய மாவட்டமாக உள்ள வேலுார் மாவட்டத்தை பிரிக்கும்படி அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து நிர்வாக வசதிக்காக வேலுாரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டம்; திருப்பத்துாரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம்; ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட மற்றொரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
* வேலுார் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்தப்படும்.
* வேலுாரில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
* சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் ஒரு சிறப்பு திட்டமாக ‘முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்’ இம்மாதமும் அடுத்த மாதமும் நடக்க உள்ளது. இந்த திட்டத்தின் வழியாக ஒரு மாதத்திற்குள் மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு எட்டப்படும்
* வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு முழுமையான கணக்கெடுப்பிற்கு பின் சிறப்பு நிதியுதவியாக குடும்பத்திற்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 40 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது. இந்த திட்டப் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையிலான காலத்தில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.
இதேபோன்று, நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தையும் உருவாக்குவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளால் தமிழகத்தில் புதிய மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.
இப்போது வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் தமிழகத்தில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35-லிருந்து 37-ஆக அதிகரிக்கும்.