பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன ?

 

”பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்” அதாவது  பி.எம் ஸ்ரீ திட்டம் (PM SHRI Scheme,  Pradhan Mantri Schools for Rising India)  என்பது மத்திய அரசின் நிதி ஆதார ஆதரவுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  மத்திய,  மாநில, நகராட்சி அல்லது ஊராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பள்ளிகளின் திறன் மற்றும் தரம் மேம்படுத்தும் திட்டமாகும். 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடைபெற்று  நாடு தழுவிய முன்னோடிப் பள்ளிகள் குறித்து கருத்துரையாடல் நடைபெற்றது. மத்திய அமைச்சர்,  தர்மேந்திர பிரதான்,  இந்த முன்னோடிப் பள்ளிகள் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஆய்வகங்களாகவும், மாணவர்களை எதிர்கால மாற்றங்களுக்குத் தயார் செய்யும் களங்களாகவும் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதே ஆண்டு செப்டம்பர் 5,  ஆசிரியர் தினத்தன்று  பிரதமர் நரேந்திர மோடி “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்“ திட்டத்தைத் துவக்கி வைத்தார். வளரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகள் திட்டம் ( PM SHRI Schools ) மத்திய அரசின் நிதி ஆதார உதவியுடன்,  செயல் திட்ட வழிகாட்டுதல்களுடன் 2022-–23 கல்வியாண்டு முதல் 2026–-27 வரை ஐந்தாண்டுகளில் படிப்படியாக பாரதம் முழுவதும் சுமார் 14,500 பள்ளிகளில்   27,000 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

இந்த பள்ளிகளில் கற்பித்தல் பணியை,  4 ஆக பிரித்துள்ளனர். அதன்படி அடிப்படைக் கல்வியாக கே.ஜி,  எல்.கே.ஜி,  யு.கே.ஜி,  ஒன்று,  இரண்டாம் வகுப்பு பாடங்கள் இருக்கும். 3 முதல்  5ம் வகுப்பு
களுக்கு  விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை இருக்கும். 6 முதல் 8ம் வகுப்புக்கு  ‘ஸ்மார்ட் லேர்னிங்’.  இதில்  ‘கோடிங்’  உள்ளிட்ட கணினி திறன்கள் வளர்க்கப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை  தொழிற்கல்வி,  விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இருக்கும். இந்த கல்வி முறைகளுக்கேற்ப கட்டமைப்பு வசதிகள்,  அறிவியல்,  கணினி ஆய்வக வசதி,  நுாலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள்,  கலைத்திறன்களை வளர்க்கும் வசதிகளோடு நீர் பாதுகாப்பு,  கழிவு மறு சுழற்சி,  மின்சார கட்டமைப்பு,  இயற்கை வாழ்க்கை முறைக்கேற்ற பசுமைக் பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுரையாளர் :

கமலா முரளி   கல்வியாளர

 

மும்மொழி கொள்கை அவசியமே…

 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதால் நமது மாணவர்களுக்கான கல்வித்தரம் மேம்படுமேயன்றி குறைவுபடாது. ஏற்கெனவே தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் அனைவருக்குமாக விரிவுபடுத்துவதில் தவறிலை,

மொழிக் கொள்கை என்பது இங்கே கட்சிகளின் சிந்தாந்தம் மட்டுமே. மக்களின்  நலனுக்காகத்தான் அரசு கட்சிகளின் சித்தாந்தங்களுக்கு அல்ல. மாறிவரும் சூழலில் உலகத் தரத்திற்குக் கல்வியை நாமும் உயரத்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஒவ்வொரு மாணவரின் பெற்றோரின் விருப்பங்களை அறிந்துகொள்ள வேண்டிய காலமும் கட்டாயமும் வந்திருக்கிறது. 1960களில் மேற்கொண்ட மொழிக் கொள்கையை இன்றைக்கும் பிடித்துக்கொண்டு நிற்பது ஏற்புடையதல்ல.

மாநில அரசுப் பள்ளிகள் மத்திய அரசுப் பள்ளிகள் எனப் பாகுபாடின்றி அனைத்துப் பள்ளிகளும் சமமான தரத்தில் கல்வியை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே அடுத்த தலைமுறைகளுக்கான நமது கடமை. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இனக்கமான போக்கைக் கையாள்வதை விடுத்து அரசியல் செய்வது சரி அல்ல.

– கோதை ஜெயலட்சுமி தினமணி கட்டுரையிலிருந்து