சட்டவிரோத, தேசவிரோத நடவடிக்கைகளுக்காக சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் (பி.எப்.ஐ) தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி ஒரு காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பி.எப்.ஐ உடனான தொடர்புகளுக்காக எர்ணாகுளத்தில் உள்ள போத்தானிக்காடு காவல் நிலையத்தை சேர்ந்த சிவில் போலீஸ் அதிகாரியான (CPO) சி.ஏ. சியாத் என்பவரை மாவட்ட காவல்துறைத் தலைவர் (DPC) சஸ்பெண்ட் செய்துள்ளார். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அவர் மீது கடமையில் அலட்சியம், ஒழுக்கமின்மை மற்றும் கடமைகளைச் செய்யத் தவறியது, காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளன என்றாலும், செப்டம்பர் 23 அன்று பி.எப்.ஐ கடையடைப்பு தொடர்புடைய வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ ஆட்களை எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் சந்தித்தார் சியாத். மேலும் பல காவல்துறை அதிகாரிகளை அழைத்து வழக்கு விவரங்கள், கைது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான ஜாமீன் வாய்ப்புகள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயன்றார். சியாத் தனது அலைபேசியில் அவர்களிடம் பேசியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து பதினைந்து நாட்களுக்குள் பரிந்துரைகளுடன் அறிக்கை அளிக்க ஒரு துணை ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள காவல்துறையில் முஸ்லிம் பயங்கரவாத சக்திகள் ஊடுருவி பலம் பெற்றுள்ளன, பச்சை விளக்கு வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது என்று ஹிந்து மற்றும் தேசியவாத அமைப்புகளும் அவற்றின் தலைவர்களும் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களின் விவரங்களை பி.எப்.ஐக்கு கசியவிட்டதாக தொடுபுழாவில் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.