சமீபத்தில் நமது தமிழக அரசு எடுத்த பிளாஸ்டிக்கை பைகள் போன்ற ஒரு சில பொருட்கள் மீதான தடை வரவேற்கதக்க ஒரு நல்ல முதல் முயற்சிதான் என்றாலும் அதனால் நம்மால் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாக தவிர்க்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் காலை எழுந்த உடன் பல் துலக்கும் பிரஷ்ஷில் இருந்து இரவு தூங்க செல்லும்போது பயன்படுத்தும் தலையணையில் இருக்கும் ரெக்ரான் வரை அனைத்தும் பிளாஸ்டிக் மயம்தான், நாம் ஒப்புக்கொண்டாலும் ஒப்புகொள்ளாவிட்டாலும் பிளாஸ்டிக் என்பது பலஆண்டுகளாய் நம் வாழ்வில் இரண்டர கலந்துவிட்ட ஒன்று, அதை மாற்றுவதும் நீக்குவதும் அவ்வளவு சுலபமானது இல்லை என்பது மறுப்பதற்கில்லை.
சரி இதற்கு நிரந்தர மாற்றுதான் என்ன?
உண்மையில் பிளாஸ்டிக்கை நாம் பயன்படுத்தலாம் தவறில்லை ஆனால் அதனை நாம் குப்பை என தூக்கி எறிகையில் தான் அது நமக்கு பிரச்சனையை உண்டாக்குகிறது. இதற்குநாம் அனைவரும் கட்டாயம் மக்காத பொருட்களான பிளாஸ்டிக், தெர்மாகூல் போன்ற பொருட்களை நாம் முறையாக பிரித்து குப்பையில் போட வேண்டும், அதனை நகராட்சிகளும் முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும், மறு சுழற்சி செய்ய முடியாத சில பிளாஸ்டிக்குகளை உருக்கி தாருடன் கலந்து ரோடு போடுவது, நடைபாதை பிளாக்குகள் செய்வது போன்ற புதிய முறைகளில் அவற்றினை அரசுகள் கையாள வேண்டும், மக்களுக்கும் இது நம் தேசம், நம் உலகம்.
நாம் வாழும் இவ்வுலகை காப்பது நம் கடமை என்ற விழிப்புணர்வு வேண்டும். பிளாஸ்டிக்கின் ஒரு சிறிய துரும்புகூட மக்கும் குப்பையுடன் கலக்காமல் மறுசுழற்ச்சி செய்யப்பட்டால் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேட்டில் இருந்து பெருமளவு நம் பூமியை நாம் காக்க முடியும்.
அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் என்பது வளர்ச்சிக்கும், வசதிக்கும் நல்லதுதான் என்றாலும் அது ஒரு வகையில் புலிவாலை பிடித்த கதைதான். எளிதில் விடமுடியாது அப்படி விடுவதாய் இருந்தால் அதற்க்கு ஒரு சரியான மாற்று கிடைக்க வேண்டும், இல்லை என்றால் அது நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். தற்போது பிளாஸ்டிக்கை பயன்படுத்த ஆரம்பித்த நம் நிலைமையும் அப்படி தான். அதற்கு ஒரு சரியான மாற்று வேண்டும் அல்லது அதனை மறுசுழற்சி செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகூட மிக அதிகம். மற்றோர் வகையில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக இயற்கை பொருட்களான மரங்கள் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்தால் அதனால் காடுகள் அழிக்கப்படும் ஆபத்து, அதனால் வரும் சுற்றுசூழல் சீர்கேடு என இதன் பாதிப்பு ஒரு சங்கிலி தொடராகவே நீளும். 2016-களில் கண்டுபிடிக்கபட்ட ” இடியோனெல்லாசகைன்ஸிஸ்” எனப்படும் ஒருவித பாக்டீரியாக்கள் தற்போது தீவிர ஆராய்ச்சியில் உள்ளது, இவை பிளாஸ்டிக்கை உண்டு மக்கவைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர், எதிர்காலத்தில் இதனை பயன்படுத்தும் நிலைகூட நமக்கு வரலாம் ஆனால் அதிலும்கூட ஒரு சிக்கல் உள்ளது அதனை சரியான கட்டுபாட்டில் வைக்க வேண்டும் அல்லது அது கரையான் போல உலகெங்கும் பரவி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைகூட மக்கவைத்துவிட்டால்…!!!, பிறகு அதற்கு மாற்று தேடி ஓட வேண்டும் பிறகு இந்த பாக்டீரியா அரிக்காத புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு, அதனை அழிக்க மற்றொரு பாக்டீரியா… என இது முன்னரே சொன்ன புலிவால் பிடித்த கதையாக நீண்டு கொண்டேதான் செல்லும்..
வேதகாலத்தில் இருந்து நமது முன்னோர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர், வேதம் என்பதே விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானத்தின் பொக்கிஷம் தான் என்பது அதனை உணர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும், தற்காலத்தில் நம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் அனைத்து பொருட்களும் முற்காலத்தில் வேறுமுறைகளிலும் பரிமாணங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தது பயன்படுத்தியதுதான் என்பதற்கு நம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் பல்வேறு ஆதாரங்கள் கொட்டிகிடக்கின்றன, உதாரணமாக பரத்வாஜ முனிவர் ஊர்விட்டு ஊர்செல்வது, நாடுவிட்டு நாடுசெல்வது, கண்டம்விட்டு கண்டம் செல்வது, ஒரு உலகத்தைவிட்டு வேறொரு உலகம் செல்வது என சுமார் ஒரு டசனுக்கும் அதிகமான விமானங்களை கண்டுபிடித்துள்ளார், அவைகளை பாதரசத்தால் இயக்கியும் காண்பித்துள்ளார் ஆனால் அவைகளை அவர் பொருள் ஈட்டுவதற்க்கும், பொது போக்குவரத்திற்கும் பயன்படுத்தியதில்லை. இதைபோல நமது முன்னோர்கள் பலரும் பெரும் முயற்சி செய்து விஞ்ஞானத்தாலும் மெய்ஞானத்தாலும் பல்வேறு அரிய அறிவியல் தொழில்நுட்ப பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை உலக நன்மைக்காகவும் அதன் தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் அளவறிந்து பயன்படுத்தினரே தவிர பணத்திற்காக அவற்றை சந்தைபடுத்தியது இல்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்கள் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான கொள்கையை கடைபிடித்தனர் அதாவது கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு பொருளும் குறைந்தபட்சம் உலக உயிர்களின் ஏழுதலை முறையை எவ்விதத்திலும் பாதிக்ககூடாது என்பதுதான்;
ஏழு தலைமுறையை பாதிக்காத ஒன்று மனித குலத்தை மட்டும் அல்ல எதையும் எப்போதும் பாதிக்காது என்பது உறுதி ஆனால் தற்கால கண்டுபிடிப்புகளை பாருங்கள் அது கண்டுபிடித்த ஒரு சில வருடங்களிளேயே தன் பாதிப்பையும் பின் விளைவுகளையும் பயங்கரமாக காட்ட தொடங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நம் கையில் அன்றாடம் தவழும் அலைபேசிதான். அதனால் வரும் பாதிப்புகளை பாருங்கள் அதன் மின்காந்த அலையால் மனிதர்களுக்கு கேன்சர் உட்பட பல்வேறு உடல் பாதிப்பு, குருவிகள் உட்பட சிறு உயிரினங்களின் இனப் பெருக்க குறைபாடு, குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதனை பயன்படுத்துவோருக்கு மனநல பாதிப்புகள் என வரிசை கட்டிவரும் எத்தனை எத்தனை பாதிப்புகள் ஒரு சில வருடங்களில் நமக்கு!!!
இயற்கையை சார்ந்த வாழ்வியல் ஒன்றே இவற்றிற்கு எல்லாம் நிரந்தர தீர்வு என்றாலும் அதனை இக்கால எதார்த்த நடை முறையில் நம்மால் அதனை 100 சதவிகிதம் கடைபிடிக்க முடியாது. ஆனால் நாம் ஒவ்வொரு வரும் பட பஞ்ச பூதங்களையும் மாசாக்காமல் தெய்வமாய் மதித்து செயல்படும் நம் பாரதத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் உலகோர் மனதில் விதைப்பதுதான் இவற்றிற்கு எல்லாம் நிரந்தர தீர்வை அளிக்கும் என்பது உறுதி.