தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று(மே 6) காலை வெளியானது. இணையதளத்திலும், எஸ்.எம்.எஸ்., வழியாகவும், மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் மாணவிகள் 96.44 சவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது: தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.37 % , மாணவிகள் 96.44 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91. 32 சதவீத தேர்ச்சி கிட்டியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 97.45 சதவீதம் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச், 1ல் துவங்கிய பொதுத்தேர்வு, மார்ச் 22ல் முடிந்தது. மாநிலம் முழுதும், 3,302 தேர்வு மையங்களில், தேர்வு நடந்தது. இதில், 7,534 பள்ளிகளை சேர்ந்த, 7.72 லட்சம் மாணவர்கள்; 21,875 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 12,000 பேர் தேர்வு எழுதவில்லை.
பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. ஏப்.,1ல் துவங்கிய விடைத்தாள் திருத்தப் பணிகள், ஏப்.,13ல் நிறைவு பெற்றன. மதிப்பெண் ஆய்வு, பகுப்பாய்வு பணிகள், ஏப்., 30க்குள் முடிந்தன. இதையடுத்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை, http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., வழியே மதிப்பெண் விபரங்கள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.