மொழி உணர்வு பூர்வமான விஷயமாகிவிட்டது. ஏனெனில் அது மனிதனை மண்ணுடன் பிணைக்கக் கூடியது. அதனால்தான் லத்தீன், அரபு மொழி கடவுள்களை ஏற்றுக்கொண்டவர்களின் தேசிய உணர்வு மாறுபடுகிறது. மொழியைக் கற்பதென்பது வெறும் மொழியை மட்டும் கற்பதல்ல, அதன் கலாச்சாரத்தையும் சேர்த்து கற்பதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சிதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியது என்றும் மொழிகளில் அந்நிய மொழி, சுதேசி மொழி என்பதெல்லாம் கிடையாது என்றும் கூறுவது உளவியல் ரீதியான அடிமைத்தனமே. ஆங்கிலத்திற்குச் சாமரம் வீசுவதும் பிற்போக்குத்தனமே.
வரம் கோரும், துதிப் பாடல்களின் தொகுப்பு என்று கேலி செய்யப்படும் வேதங்களிலேயே பாரதம் ஒரே நாடு என்று பதியப்பட்டு இருப்பது மட்டுமன்றி, சடங்குகளின் வழியே இன்றும் அது ஒவ்வொரு ஹிந்துவின் மனதிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இது புவியியல் அறிவைப் பரப்புவது இல்லை. ஒவ்வொரு ஹிந்துவும் இந்த நாட்டை தன்னின் விரிவாக்கமாகவே பார்க்கிறான் என்பதற்கு உதாரணம் பிரிவினை சிந்தனைக்குச் சாவுமணி.
‘நான் எழுதும் சொல்லில் ஒரே ஒரு எழுத்தைக் குறைக்க முடியுமென்றால் மகனைப் பெற்ற மகிழ்ச்சி அடைவேன்’ என்று வடமொழியில் ஒரு பழஞ் சொல் உண்டு. தமிழிலும் இது உண்டு. திவ்ய பிரபந்தத்தில் இதைப்பார்க்கலாம். ஆனால் தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லாதவர்கள் தமிழ் எழுத்துக்களையே வழக்கத்திலிருந்து நீக்கி, அதைச் சீர்திருத்தம் என்றும் கொண்டாடுகிறார்கள். என்ன ஒரு அறிவீனம்!
நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாக கையாண்ட பிரித்து ஆளும் சூழ்ச்சி கொண்ட, மொழி வழி தேசியம் என்ற கருத்து தமிழகத்தில் பிரதானமாக்கப்படுகிறது. பிரிவினை கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.
திரேதா யுகத்தில் ராமராஜ்யத்தில் லவணாசுரனை அடக்க மதுரா நோக்கி சத்ருக்னன் தலைமையில் போர்ப்படை கிளம்பியது தொடங்கி, (அப்போது ஸ்ரீராமபிரானின் அறிவுரைப்படி போர் முடிந்த பிறகு அங்கு இயல்பான ஆட்சியை நிறுவிவிட்டுத் திரும்ப சத்ருக்னனுக்கு 12 ஆண்டுகள் பிடித்தது. ஸ்ரீராமபிரானும் இலங்கையைக் கைப்பற்றி ஆளவில்லை. உரியவரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பி விட்டார்.) சோழச் சக்ரவர்த்தி ராஜேந்திரனின் கடல் கடந்த படையெடுப்பும் ஆட்சியும் சிவாஜி மன்னனின் ஆட்சி வரையில், அமைந்த அரசுகள் நமக்கு முன்மாதிரியாக உள்ளன.
எந்த பாரதிய மன்னனும் கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் மொழியைத் திணிக்கவில்லை. சமயத்தைத் திணிக்கவில்லை. அந்தந்தப் பகுதிகளில் இருந்த வாழ்க்கை முறைக்கு எந்த இடையூறும் செய்யாமல் அதைத் தொடர அனுமதித்ததுடன் எக்காலத்துக்கும் எந்நாட்டவருக்கும் சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆட்சியை அமைத்தனர். தங்கள் மேன்மையை, உயர்வை நிலைநாட்டி பின்பு திரும்பிவிட்டனர். அதனால்தான் மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் இந்திய பண்பாட்டின் கூறுகளும் சான்றுகளும் இன்றும் கிடைத்த வண்ணம் உள்ளன.
அங்கெல்லாம் தமிழ்மொழியோ, சமஸ்கிருதமோ மராட்டியோ திணிக்கப்படவில்லை. மாறாகப் பண்பு சார்ந்த வாழ்க்கைமுறையை வாழ்ந்து காட்டி ஏற்க வைக்கப்பட்டது. இதற்கு மாறாக, இன்றும் நம்நாட்டில் ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடக்கும் விதங்களும் செயல்களும் கலாச்சார வேறுபாட்டைத் தெளிவாக்குகின்றன.
படைப்பில் அல்லது பரிணாமத்தில் வேற்றுமை என்பது வெளிப்படையாக வெளிப்படுகிறது. ஆனால் அதன் அடிநாதமாக, சாரமாக இருப்பது ஒருமை. இதைக் கண்டுபிடித்து சொன்னது இந்திய ஞானம்.
தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீராமனுஜரும் ஸ்ரீசங்கரரும் தமிழில் எழுதாமல் வடமொழியில் எழுதினார்கள். காரணம், அது இந்தியா முழுவதும் தெரிந்த மொழி. பொது மொழி.
எனவே தான் அரசியல் சாசனத்தை நமக்கு வகுத்தளித்த அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் பொதுமொழியாக ஆட்சி மொழியாகச் சமஸ்கிருதமே இருக்க வேண்டும் என்றார். அது முழுமையாக நடைமுறைக்கு வரும் வரையில் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழி (உருது கலந்த இந்துஸ்தானி அல்ல) பயன் படுத்தலாம். ஆனால், ஆங்கிலம் கூடாது என்றார் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படித்த அந்த மாமேதை.
இங்கு அப்பாக்களும் அண்ணாக்களும் தம்பிகளும் ஆங்கிலமும் வேண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தொடரவேண்டுமெனத் தீர்மானம் போட்டுத் தங்கள் ‘அறிவை’ வெளிப்படுத்தினர். அது அடிமைத்தனமல்ல, ‘சமூக நீதி’க்கான பிரகடனம் என்று விளக்கவுரை எழுதினார்கள். ‘ஆசிரியர்’களும் ‘பேராசிரியர்’களும் பிரித்து ஆள்வதை ஆங்கிலேயர்களும் ‘அடித்து’ பெறுவதை ஜின்னாவும் ‘தமிழர்’களாகிய நாமும் அறிவோம். இதை ‘தமிழ் சாமி’யும் அறியும். இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாடும் விரைவில் பிரிவினை சக்திகளிடமிருந்து விடுதலை பெறும்.
‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதானாலே விளையும் தீமையே’
என்பதை நற்றமிழர் அறிவார்கள்.