பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய தேசியக் கொடி யின் மூவர்ணங்களில் சைவ விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த13, 14-ம் தேதிகளில் பிரான்ஸில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் அவர் பங்கேற்றார். அன்றிரவு பாரிஸில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. பிரான்ஸின் மிக பழமையான இந்த அருங்காட்சியகத்தில் உலகின் மிக முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் விருந்து அளிக்கப்படும்.கடந்த 1953-ம் ஆண்டில் அப்போதைய இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு அங்கு விருந்து வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பொதுவாக லூவர் அருங்காட்சியக விருந்தின்போது பிரான்ஸ் தேசிய கொடியின் வர்ணங்களில் உணவு வகைகள் இடம்பெறுவது வழக்கம். இந்த முறையை மாற்றி பிரதமர் மோடிக்காக இந்திய தேசிய கொடியின் வர்ணங்களில் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பிரான்ஸ் பயணத்தின்போது அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சந்தன மரத்தால் செய்யப்பட்ட சித்தார் இசைக் கருவியை பரிசாக வழங்கினார். இந்த சித்தாரில் சரஸ்வதி தேவி, விநாயகர், இந்திய தேசிய பறவையான மயில் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜெட் மேக்ரானுக்கு போச்சம்பள்ளி ஜகாட் பட்டுப் புடவையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். இது தெலங்கானாவின் பிரசித்தி பெற்ற கைத்தறி பட்டுப் புடவை ஆகும். பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு ராஜஸ்தானின் மார்பிள் கற்களால் தயாரிக்கப்பட்ட டைனிங் பிளேட்டுகளை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.