திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் மீது, உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இத்திட்டத்தால், இரு நாடுகள் மத்தியில் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. 137 பில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் மின்சார உற்பத்திக்காக என்று சீனா கூறி வருகிறது. எனினும், இது ஆற்றின் நீர் ஓட்டத்தைக் கடுமையாக சீர்குலைத்து விடும் என்பதே நிதர்சனம்.
‘இமயமலை, இயற்கையாகவே சூழலியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி. இந்தப் பகுதியில்தான் பிரம்மபுத்திரா நதி, பாரதத்தின் அருணாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு, ஒரு பெரிய ‘U’ வடிவ வளைவை எடுக்கிறது. இந்தப் பகுதி புவித் தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ளதால், இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.
இங்கு அணை கட்டப்பட்டால், அது வண்டல் மண் ஓட்டத்தைத் தடுத்து, மண் வளத்தைக் குறைத்து, விவசாய உற்பத்தியைப் பாதிக்கும். பிரம்மபுத்திரா நதி பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட ஒரு பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய மையமாகும். இத்திட்டம், மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு அருகிலுள்ள ‘செமயுங்டங்’ பனிப்பாறையில் உற்பத்தியாகி, அருணாச்சலப் பிரதேசத்தில் ‘சியாங்’ என்ற இடத்தின் அருகே பாரதத்திற்குள் நுழைகிறது. பின்னர், அசாம் வழியாகப் பாய்ந்து, வங்கதேசத்தில் நுழைந்து, இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த நதி திபெத்தில் உற்பத்தியானாலும், அதன் நீரில் 14% மட்டுமே அங்கிருந்து வருகிறது. மீதமுள்ள 86% நீர் அருணாச்சலம், அசாமில் பெய்யும் பருவமழை மற்றும் துணை நதிகள் மூலமாகவே பாரதத்திற்குள் உருவாகிறது.
அணையால் பாரதத்திற்கு ஆபத்தா? :
சீனாவின் அணை, நதியின் நீர் ஓட்டத்தை மாற்றினால், பாரதம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். இது விவசாயம், மின் உற்பத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், பிரம்மபுத்திராவின் முக்கிய துணை நதிகளான சியாங், திபாங் மற்றும் பிரம்ம புத்திராவின் மற்ற துணை நதிகளான சுபன்சிரி, கமெங் ஆகியவற்றின் குறுக்கே அணை கட்ட பாரதம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், நீர் ஓட்டத்தைச் சீராக்குவது, வெள்ளத்தைத் தடுப்பது மற்றும் வறட்சியைத் தணிப்பதே பாரதத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரு நாடுகளிடையே பதற்றங்களைக் குறைக்கும் விதமாக பாரதமும், சீனாவும் 2013ல் நீர்நிலைத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி திபெத்தில் பொழியும் மழைப்பொழிவு, நீர் மட்டம், வெளியேற்றப்படும் நீரின் அளவு உள்ளிட்ட வெள்ளக்காலத் தரவுகளை சீனா, பாரதத்திற்கு வழங்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இரு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.