“உலகளவில் பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. அந்த சுயநல நாடுகளை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முன்னேறிச் சென்று, இலக்கை அடைந்து வரலாறு படைப்போம். நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்டது போல, வலுவான தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் உறுதி ஏற்போம். இது தான் காலத்தின் தேவை. கடந்த 10 ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது பெரிய இலக்குகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்”, பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தினப் பேருரையின் சாரம் இது. அவர் இன்னும் எத்தனையோ விஷயங்கள் பற்றிப் பேசினார் அவற்றில் சில:
சுதேசி வியூகம்:
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம். நம் வணிகர்கள், கடைக்காரர்கள் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயி வாழ்க:
விவசாயிகளுக்கு எதிரான எந்த கொள்கைகளையும், என் அரசு பொறுத்துக் கொள்ளாது. விவசாயிகளே நாட்டின் தூண்கள். நம் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. பிரச்சனை என வந்து விட்டால், விவசாயிகளை கைவிட மாட்டேன். அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பேன்.
தீபாவளிப் பரிசு:
நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதம், 18 சதவீதம் என இனி இரு ஜி.எஸ்.டி வரிகள் மட்டுமே!
நீரும் குருதியும்
ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது. சிந்து நதிநீர் நமக்கே சொந்தம். நம் விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது.
மிரட்டல் பலிக்காது போடா! பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கெல்லாம் பாரதம் இனி ஒருபோதும் அஞ்சாது. ‘ஆபரேஷன் சிந்துார்’ புதிய பாரதத்தின் முத்திரை. ராணுவத்திற்கு நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம். அதன் பலனை, ஆபரேஷன் சிந்துார் மூலம் உலகமே பார்த்து வியந்தது. இனி வரும் காலங்களில் பாரதத்தை சீண்டினால், மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
ஊடுருவலை ஒழிப்போம்:
எல்லைப் பகுதிகளில் ஊடுருவல், சட்டவிரோத குடியேற்றம் காரணமாக மக்கள் தொகை ஏற்றத்தாழ்வின் ஆபத்து தலைதூக்கியுள்ளது. இந்த தேசப் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும், உயர் அதிகாரம் கொண்ட மக்கள் தொகை தொடர் ஆய்வு இயக்கத்தை துவங்குகிறோம்.
நம் ராணுவத்தில் ஆத்ம நிர்பர்:
தேசிய பாதுகாப்பு விஷயத்தில் இனி வெளிநாடுகளை சார்ந்திருக்க முடியாது. நம் விமானப் படையின் போர் விமானங்களுக்கான இன்ஜினை உள்நாட்டிலே தயாரிக்கணும்; நம் விஞ்ஞானிகள், இளைஞர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளணும். கொரோனா காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய நம்மால், இதையும் செய்ய முடியும்.
செமிகண்டக்டர் மந்திரம்:
இந்த ஆண்டு இறுதிக்குள் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தைக்கு வந்துவிடும். தேசத்தில் ஆறு செமிகண்டக்டர் உற்பத்தி சாலைகள் உள்ள நிலையில், மேலும் நான்கு புதிதாக அமைக்கப்படும்.
கடல் கடைவோம்:
தேசிய ஆழ்கடல் எரிவாயு ஆய்வு திட்டம் துவங்கப்படும். இது எதிர்கால சந்ததியினருக்கு உதவும். பெட்ரோல், டீசல் எரிவாயு இறக்குமதிக்கு பெருமளவில் செலவிடப்படுகிறது. சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர்மின்சக்தி, அணுசக்தி ஆகியவற்றில் பெரிய விரிவாக்கங்களுடன், கடலடி வளங்களைப் பயன்படுத்த, ‘சமுத்திர மந்தன்’ வருகிறது.
சுதர்ஸன சக்கரம்:
பகவான் கிருஷ்ணரின் சக்தி வாய்ந்த ஆயுதம் சுதர்ஸனம் எனும் சக்கரம். வரும் 10 ஆண்டுகளில், ‘சுதர்ஸன் சக்ரா’ எனும் பெயரில் புதிய வான் கவச பாதுகாப்பு திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இந்த திட்டம் வான் பாதுகாப்பு அம்சம் துல்லியமான எதிர் தாக்குதல் நடத்தும் திறனும் கொண்டது.
வானமே எல்லை அல்ல! விண்வெளியும் நமதே! சொந்தமாக விண்வெளி நிலையத்தை கட்ட உறுதிபூண்டுள்ளோம். இத்துறையில் உலகளவில் முன்னணியில் இனி நாம்தான்.
பிரதமர் சுதந்திர தின பேருரை சுவாரஸ்யங்கள்!
கரும்பு தின்ன . . . 15,000 ரூபாய்
இனி தனியார் துறையில் முதல் முறை வேலைக்கு சேரும் ஒரு இளைஞர் ஆறு மாதம் பணியில் நீடித்தால் அவருக்கு 15,000 ரூபாய் கிடைக்கும். இதுதான் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த ‘பிரதான் மந்திரி விகசித் பாரத் ரோஜ்கார்’ திட்டம். இந்த திட்டத்திற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி அவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். ஈ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி மூலம் இந்த ஊக்கத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை பணியில் சேர்வோர், இதன் மூலம் பயனடைவர். இவ்வாரு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஆர்.எஸ்.எஸ் 100: பிரதமர் உரையில் வாழ்த்து
செங்கோட்டையில், 12 முறை சுதந்திர தின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, முதன்முறையாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பற்றி இந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிட்டார்: “உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டுகளாக தேச சேவையில் ஈடுபட்டுள்ளது. நம் நாட்டை கட்டியெழுப்புவதில் அந்த சங்கத்தின் பங்கு அளப்பரியது. சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ஆர்.எஸ்.எஸ். நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.’’
பருமன் மீது மோடி போர்!
சமையல் எண்ணெய், சர்க்கரை பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்கும்படி சமீப காலமாக பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். சுதந்திர தின உரையிலும் இதனை அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில் உடல் பருமன் நம் நாட்டிற்கு ஒரு பெரிய சவாலாக மாறும். ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க முடிவு செய்தால், அது நாட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.