பிரதமர் நரேந்திர மோடி வரும் 24, 25ம் தேதிகளில் மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுக்கு செல்கிறார். அங்கு மொத்தமாக சுமார் ரூ. 25,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். வரும் 24ம் தேதி காலை 11:30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு, சுமார் ரூ. 17,000 கோடி திப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பஞ்சாயத்து மட்டத்தில் பொது கொள்முதல் செய்வதற்கான ஒருங்கிணைந்த இ கிராம் ஸ்வராஜ் மற்றும் ஜி.இ.எம் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 35 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளையும் வழங்குகிறார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 4 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் ‘புதுமனை புகுவிழாவை’ குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். 25ம் தேதி காலை சுமார் 10:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்பின், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில், பிரதமர், ரூ. 3,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர், நமோ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் செல்லும் பிரதமர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியின் சில்வாசாவில், ரூ. 4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்பிறகு, டாமனில் உள்ள தேவ்கா கடல்முனையை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.