,கர்நாடகாவில், ஹாசன் தொகுதி ம.ஜ.த., – எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பல பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
தற்போது, வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல், வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக, நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக, காங்கிரஸ் பிரமுகர்கள் நவீன் கவுடா, சேத்தன், புட்டராஜ், பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மீது, ஹாசன் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. நவீன் கவுடா உட்பட நான்கு பேரும், ஹாசன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானதால், அவர்கள் தலைமறைவாகினர். இதற்கிடையில், பிரஜ்வல் வழக்கில் பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜ் கவுடா, ஹாசன் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் பிரமுகர்களை மட்டும் கைது செய்யாமல் இருப்பதாக, சிறப்பு புலனாய்வு குழு மீது, குற்றச்சாட்டு எழுந்தது.
ஹாசன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நவீன் கவுடா உட்பட நான்கு பேரும், மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. நவீன் கவுடாவும், சேத்தனும் உயர் நீதிமன்றத்திற்கு காரில் வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் நவீன் கவுடா, சேத்தனை கைது செய்தனர்.