சமீபத்தில் டெல்லியில் இந்தியா-இலங்கை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் மீன் வளத்துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களில் முடிவெடுத்தார்கள். இனி மீனவர் பிரச்சினையை கையாளும்போது இரு நாட்டு கடற்கடையினரோ கடலோர காவல்படையினரோ எந்த வகையிலும் வன்முறையில் இறங்கக் கூடாது, மீனவர் உயிருக்கு ஆபத்து எற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற இரு நாட்டு மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இந்தியா-இலங்கை அரசுகள் ஏற்றுள்ளன. இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளும் 6 மாதத்துக்கு ஒருமுறை சந்தித்துப் பேச வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நல்ல முயற்சியைப் பாராட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மனமில்லையே? மீனவர் பிரச்சினையை பெரிதாக்கி அதில் குளிர் காய்ந்து வந்த வர்களாயிற்றே அவர்கள்? எப்படிப் பாராட்டுவார்கள்?
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘மீத்தேன் வாயு’ திட்டத்தை அன்றைய மன்மோகன் அரசுதான் திட்டமிட்டது. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தான் ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே அந்தத் திட்டம் பற்றி ஆய்வு செய்தபோது ஸ்டாலினும், வைகோவும் திருமாவும் மத்திய அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய கூத்து நடந்தது.
அந்தத் திட்டத்தால் மண்வளம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் குறையும், பல்வேறு நோய்கள் உருவாகும் என்று விவசாயிகள் கவலைப்பட்டு குரல் எழுப்பியவுடன் பாஜக அரசு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. பாஜக அரசு தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டுவருகிறது என்று சித்தரிக்கும் பிரச்சாரம் இவ்வாறு முறியடிக்கப்பட்டது.
காவிரி பிரச்சினையிலும் தமிழக கட்சிகள் வெற்றுச் சவடால் விட்டு இரு மாநிலங்களிலும் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு வந்தன. நல்லவேளை, கர்னாடகா மக்கள் உணர்ச்சி வசப்பட்டபோது கூட தமிழக மக்கள் அமைதி காத்தார்கள்.
மத்திய அரசு விருப்பு, வெறுப்பின்றி நாடுமுழுவதும் ஒற்றுமையுடன் கூடிய நல்லாட்சியை தொடர்ந்து நடத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது.
பிரச்சினைகளை வைத்துத்தான் அரசியல் கட்சி எதுவும் கட்சி வளர்க்கிறது. ஆனால் தேச நலனுக்கு குந்தகம் நேரிடும் விதத்தில் பிரச்சினையை முற்றச் செய்வது அரசியல் அல்ல. தேசத் துரோகம். அதற்கு மத்திய அரசு திறன் மிக்க விதத்தில் முட்டுக்கட்டை போட்டுள்ளது பாராட்டத் தக்கது.
தமிழக மக்கள் பிரிவினைவாத, தேச விரோத தமிழக கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும். அந்நாள் எந்நாளோ?