கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த வந்த மாநில பா.ஜ., செயலர் நசீர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநில பா.ஜ., செயலர் ஏ.கே.நசீர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், நேற்று கலந்துகொண்டார். இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் உள்ள, துாக்குப்பாலம் மசூதிக்குச் சென்றார். மசூதி வாசலில் நின்ற சிலர், அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். எனினும், மசூதியில் இருந்த மதகுரு, அனுமதி வழங்கியதையடுத்து, நசீர், மசூதிக்குள் சென்று தொழுதார். மசூதிக்குள், நசீர் தொழுதபோது, மர்ம நபர்கள் சிலர், அவரை பின்னிருந்து தாக்கினர். காலால் உதைத்து நசீரை கடுமையாக தாக்கிய அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டனர்.
படுகாயமடைந்த நசீர், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டி.ஒய்.எப்.ஐ., எனப்படும், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஆர்வலர்கள்தான், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிய, மாநில போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.