மேற்கு வங்கத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்தது. இதன்படி, பைக்கில் பேரணியாக சென்று அமித்ஷாவை வரவேற்க அக்கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர். இப்பேரணியை கொல்கத்தாவின் பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவரான அர்ஜுன் சௌராசியா தலைமையேற்று வழிநடத்தி செல்ல முடிவாகி இருந்தது. ஆனால், சித்புர் காசிப்பூர் பகுதியில் உள்ள கோஷ் பகன் ரெயில்வே யார்டில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் சௌராசியா தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் திரண்டனர். இது திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இது அரசியல் படுகொலை. இதில் சி.பி.ஐ விசாரணை வேண்டும். திருணமூல் அரசின் ஓராண்டு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது. ஆனால் அரசியல் கொலைகள் தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை நான் நேரடியாக சென்று சந்தித்தேன். அவருடைய பாட்டியும் தாக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் வன்முறை மற்றும் கொலைகளை பயன்படுத்தி அச்சத்தை தூண்டவும் எதிர்கட்சிகளை மௌனமாக்கவும் முயற்சி நடக்கிறது. இது ஒரு அப்பட்டமான சதி. வன்முறை அரசியலில் பா.ஜ.கவுக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல வன்முறை அரசியலுக்கு நாங்கள் அஞ்சுவதில்லை. உயர்நீதிமன்ற அனுமதியுடன் மேற்குவங்கத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வழக்குகள் சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது” என மமதா அரசை கடுமையாக சாடினார்.