புதுடில்லி பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக, வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன் நேற்று ஆஜராகினர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக பார்லி.,யில் கேள்வி கேட்க, திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, வழக்கறிஞரும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலருமான ஜெய் அனந்த் தேஹாத்ராய் புகார் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபேவிடம் அவர் வழங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். இது குறித்து பார்லி., ஒழுங்கு கமிட்டி விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு சுமத்த எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த காரணங்கள் அமையாததால், கவுதம் அதானியை குறிவைத்து கேள்விகள் கேட்டு பிரதமரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ., – எம்.பி., வினோத் குமார் சேன்கர் தலைமையிலான, பார்லி., ஒழுங்கு கமிட்டி முன், வழக்கறிஞர் தேஹாத்ராய் மற்றும் எம்.பி., நிஷிகாந்த் துபே நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நிஷிகாந்த் துபே கூறுகையில், ”ஒழுங்கு கமிட்டியினர் என்ன கேள்வி கேட்டாலும் முறையான பதில் அளிப்பேன். மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆவணங்கள் பொய் சொல்லாது,” என்றார்.
மூன்று மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின், வினோத் குமார் சேன்கர் கூறுகையில், ”இது மிகவும் தீவிரமான பிரச்னை. மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
”அவர், 30, 31ம் தேதிகளில் ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம். விசாரணைக்குப் பின், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.