ஆரோக்கியமே பிரதானம்:
உலக சுகாதார அமைப்பின் தலைமையின் கீழ் 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதி உலக சுகாதார தினமாக அறிவிக்கபட்டு கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் மக்களிடையே உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளை போற்றுவோம் என்பது இந்த வருட கருத்தாக முன் வைக்கப்படுகிறது.
சுகாதார பணியாளர்களுக்கு நன்றி:
பொதுவாகவே நம்மை காக்க பாடுபடும் மருத்துவர்களை மதிக்கும் அளவிற்கு நாம் அதே அக்கறையுடன் நம்மை காக்க பாடுபடும் செவிலியர்கள், வார்ட் பாய், துப்புரவு பணியாளர்கள் என பலரையும் மதிக்க தவறிவிடுகிறோம். தெரிந்தோ தெரியாமலோ உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான கருத்து தற்போதைய கொரோனா நோய் பரவல் வெகுவாக உலகை ஆக்கிரமித்து பல உயிரை பலிவாங்கும் இந்த காலகட்டத்தில் அவர்களின் அர்பணிப்பை உலகுக்கு எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது. நம்மை காக்க பாடுபடும் மருத்துவ குழுவிற்கும்,
சுத்தம் சுகாதாரம் பேணும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த நாள் நமது நன்றிகளை சொல்ல, அன்பு பாராட்ட ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது, இதனை நாம் பயன்படுத்தி அவர்களுக்கு நாம் நம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வோம்.
நோய் நாடி நோய் முதல் நாடி:
பொதுவாக கொரோனா போன்ற ஒரு சில அபூர்வமான கொள்ளை நோய்களின் தாக்கத்தை தவிர்த்து பார்த்தால் இன்றைய சூழ்நிலையில் நோய்க் கிருமிகளினால் வரக்கூடிய வியாதிகளைவிட வாழ்க்கை முறை மாற்றங்கள், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, அதிக எடை, அதிக மன உளைச்சல் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய் போன்றவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு
ஆய்வறிக்கையில் உலக அளவில் 422 மில்லியனுக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ல் 642 மில்லியனாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதேபோல் ரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் என வேகமாக அதிகரித்து வருகிறது. உலகில் 17.5 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். இது உலக மக்கள் தொகை இறப்புவிகிதத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருடத்துக்கு
8 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 2 மில்லியன் பேர் இறக்கின்றனர்.
அலட்சியம் ஆபத்து:
இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே அதிகம் விழிப்புணர்வு இல்லாததும், இந்த நோய்கள் இருப்பது தெரிந்தும் சிலர் முறையாக சிகிச்சை பெறாமல், உரிய உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தை கடைபிடிக்காமல் இருப்பதால் அந்நோயின் பக்க விளைவுகளுக்கு ஆளாகின்றனர். இதனால் வீணான பணச்செலவும், குடும்பத்தாருக்கு மன உளைச்சலும் ஏற்படுகிறது. நம் மக்களிடத்தில் உள்ள எதிலும் அலட்சியப்போக்கு, றியாமை போன்றவையே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது என்றால் அது மிகை அல்ல.இதனை சரிசெய்ய இந்த நோய்களை பற்றிய சரியான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட உலகஅலவில் வழிவகை செய்யப்பட வேண்டும். மருத்துவ முகாம்களை நடத்தி மக்களின் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்து மருத்துவத்தை ஏற்று ஆரோக்கியம் பெற வழிவகை செய்ய வேண்டும் தேவைப்பட்டால் அவர்களை அருகில் உள்ள
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சை பெற உதவ வேண்டும். இதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் அவசிய “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் வள்ளிவரின் கூற்று மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும். தங்களுக்கு வந்திருக்கும் நோயை கண்டு அறிந்து மருத்துவர்கள் கூறியபடி மருந்து, உணவு முறை, வாழ்க்கைமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.
விழிப்புணர்வு அவசியம்:
இன்று நாம் நாட்டில் பெரியம்மை நோய் இல்லாமல் செய்து விட்டோம். போலியோ வெகுவாக குறைந்துவிட்டது, முன்பு மனிதனின் சராசரி வயது 55 ஆக இருந்தது. இன்று அது 70 ஆக அதிகரித்துள்ளது இந்த வெற்றிக்கு மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நீண்ட கால அளவிலான சீரிய முயற்சியே காரணம். மக்கள் ஆரோக்கியமாக இருக்க தற்போதெல்லாம் குழந்தைகள் பிறந்தவுடன் நோய் வராமல் இருக்க தடுப்பூசிகள் போடப்படுகின்றன. பள்ளிப்பருவத்தில் உடற்கல்வி, விளையாட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் மாணவர்களுக்கு சத்துணவு என அரசுகளும் தீவிரமாக
முயற்சித்துதான் வருகின்றன.. இப்படி அரசாங்கம் என்னதான் முயற்சி செய்தாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றால் அதனால் எவ்விதத்திலும் பயன் இல்லை. எனவே நாம் ஆரோக்கியமாக வாழ நாமும் நமது அரசுக்கு முழுஒத்துழைப்பு அளிப்பது மிகவும் அவசியம்.
பாரம்பரியம் தரும் ஆரோக்கியம்:
ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என தெரியாமல் தற்காலத்தில் பலரும் இவர் சொல்வது, அவர் சொல்வது, யூ-டியூப் மருத்துவம், சமூக வலைதளத்தில் பகிரப்படும் பல பொய் செய்திகள் என குழம்புகின்றனர் ஆனால் உண்மையில் நம் பாரத திருநாட்டில் இந்த குழப்பத்திற்கு எல்லாம் அவசியமே இல்லை அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமான நமது பாரம்பரியமும் கலாசாரமும் நமக்கு ஆரோக்கியத்தை பற்றி விரிவாக எடுத்து சொல்கின்றன, தங்களது ஒவ்வொரு செயலிலும் இதனை பயன்படுத்திதான் நமது முன்னோர்கள் இத்தனை வருடங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனை மறந்து மேற்கத்திய கலாசார மோகத்தில் நாம் அதிகமாக மூழ்கியதே தற்போதைய அவல நிலைக்கு காரணம். கொரோனா நோயின் தாக்கம் கைகூப்பி வணக்கம் சொல்வது, சுத்தமாக இருப்பது, சுகாதாரம் பேணுவதன் அவசியம் போன்ற நமது பாரம்பரியத்தின் கலாசார பெருமைகள் சிலவற்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இனியாவது நம் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்து மறந்துபோன நம் பண்பாட்டினை மீட்டெடுத்து உலகிற்கு என்றும் பாரதமே சிறந்த குரு என நிரூபிப்போம்.