அயோத்தியில் பாலராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது கோடிக்கணக்கான பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், விரல் விட்டு எண்ணத்தக்க சில குதர்க்கவாதிகள் ஆலய கட்டுமானத்துக்காகவும், அதுதொடர்பான இதர நடவடிக்கைக்காகவும் செலவிட்ட தொகையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருக்கலாமே? என்று முணுமுணுத்து வருகிறார்கள். இது விதண்டாவாதத்தின் உச்சம் என்றால் மிகையன்று.
ஆலயம் சார்ந்த செலவு வீணானது என்ற தவறான சிந்தனையின் அடிப்படையில் குதர்க்கவாதிகள் குட்டையை குழப்புகிறார்கள். அவர்களது நோக்கும், போக்கும் பாரத, தேசிய நீரோட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது.
ஏ.எஸ்.அல்டேகர் `எஜிகேஷன் இன் ஏன்சியென்ட் இந்தியா’ என்ற புத்தகத்தில் ஆலயப் பொருளாதாரம் காலம்காலமாக பாரத விருட்சத்தின் ஆணிவேராக திகழ்ந்து வருகிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதைப்போல ஏ.எல்.பாஷம் `தி ஒன்டர் தெட்வாஸ் இந்தியா’ என்ற புத்தகத்தில் கல்விக்கூடமாகவும், மருத்துவமனையாகவும், விளிம்பு நிலை மக்களின் புகலிடமாகவும் ஆலயம் விளங்கியது என்பதை வெகு நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.
சனாதன தர்மம் இறைமையும், இயற்கையும் இரண்டற கலந்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. இறைவன் இல்லாத இடமே இல்லை. இந்த இறை சிந்தனை மேலோங்கி விட்டால் ஆக்கப்பூர்வமான ஆற்றல் ஊற்றாக பொங்கத் தொடங்கி விடும். குழந்தைகள் முதல் முதியவர் வரையிலான அனைத்து தரப்பினருக்குமான மையப்புலமாகவே அன்று முதல் இன்று வரை ஆலயங்கள் இயங்கி வருகின்றன. ஆலயங்கள் பல்வேறு சங்கமங்களுக்கு வழிவகுத்துள்ளன. குடும்ப உறவுகளை ஏற்படுத்தியுள்ளன. வலுப்படுத்தியுள்ளன. எண்ணற்ற பரிவர்த்தனைகளுக்கு ஆலயங்கள் வழிவகுத்துள்ளன. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஆலயங்கள் எதற்கும் பயன்படாதவை. இதற்கு செலவிடப்படும் தொகை பொருளாதார ரீதியான வீணடிப்பே என்று மனத்தெளிவற்றவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பாரதத்தில் பல்வேறு மன்னர்கள் விண்ணளாவ ஆலயங்களை எழுப்பியுள்ளார்கள். இதனால் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். நேர்முக வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், மறைமுக வேலைவாய்ப்பும் மேலோங்கியுள்ளது. இது நிலையான, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்று நவீன பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது ஆலயப் பொருளாதாரத்தில் முழுமையாக அடங்கியுள்ளது.
பாலின சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இறைவனே அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில்தான் காட்சியளிக்கிறார். ஆலயங்களால் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. பூச்சரம் தொடுப்பவர்களாக, தண்ணீர் கொண்டு வருபவர்களாக, தூய்மைப் பணியை மேற்கொள்பவர்களாக பெண்கள் பணியாற்றி உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் பெண்களால்தான் நடனமும், இசையும் தழைத்தோங்கின. பெண்கள் சிறு கடைகளையும் நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன.
கர்நாடகாவில் உள்ள தாவர்கெரே என்ற இடத்தில் ஒரு சத்திரம் இருந்தது. இது ஆலயம் சார்ந்தது. இந்த சத்திரத்தில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இதேபோல சிகார்ப்பூர் மாவட்டத்தில் டால்குண்ட் என்ற இடத்தில் சமஸ்கிருத கல்லூரி செயல்பட்டு வந்தது. இங்கும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வேதங்களைப் படித்தார்கள். மொழியிலும், இலக்கியத்திலும் புலமை பெற்றார்கள். தஞ்சாவூரிலும் ஆலயம் சார்ந்து கல்விக்கூடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இங்கு சுமார் 500 மாணவர்களுக்கு கல்வியுடன் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஆலயம் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது. திருமலையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் நிறுவனம் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களை கற்பித்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர், பயனடைந்தும் வருகின்றனர். சின்மயா வித்யாலயா பள்ளிக் கூடங்கள் தரமான கல்வி வழங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக, பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சின்மயா அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகளும் செய்யப்படுகின்றன.
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில், பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில், மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் ஆலயம் போன்றவற்றில் பக்தர்களுக்கு உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோயில்களில் திருக்குளங்கள் உள்ளன. இத்திருக்குளங்களில் நீர் நிரம்பியிருந்தால் பக்கத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடையாது. மழை நீர் சேகரிப்பை நம் முன்னோர் நெடுங்காலத்துக்கு முன்பே அமலாக்கியுள்ளனர் என்பதையே இது புலப்படுத்துகிறது. இது வேளாண்மை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆலயங்கள் மேம்படுத்துகின்றன. ஆலயங்களில் ஆன்மிக ரீதியான ஆக்கப்பூர்வமான நுண்ணலைகள் மேலோங்கியுள்ளன. இது பக்தர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுப்படுத்துகிறது. ராஜஸ்தானில் உள்ள பாலாஜி ஆலயம், சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் போன்றவை பக்தர்களின் மன ரீதியான கோளாறுகளை நிவர்த்தி செய்கின்றன. இதை அனுபவ ரீதியாக பக்தர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
உணர்வு ரீதியான ஸ்திரத்தன்மை காணப்பட்டால் பல்வேறு நோய்களும் அண்டாமல் விலகிச் சென்று விடும். ஓம் என்று தொடர்ந்து உச்சரிப்பது பல்வேறு சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சங்கொலிப்பது நெஞ்சுக்கு, கழுத்துக்கு மிகவும் நல்லது. தைராய்டு சார்ந்த கோளாறையும் இது தணிக்கக்கூடியது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தியானம் அமைதியான, மிதமான சூழ்நிலை, உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்துவதால் நன்கு தூக்கம் வருகிறது. ரத்தக் கொதிப்பு மட்டுப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றெல்லாம் மருத்துவ வல்லுநர்கள் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர். கோயில்களில் நந்தவனங்கள் உள்ளன. துளசியும், மலர்களும் உடல்நலத்தை மேம்படுத்துகின்றன. மலர் மருத்துவம் என்பது இப்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை நம் முன்னோர் நெடுங்காலத்துக்கு முன்பே நடைமுறைப்படுத்தியுள்ளனர். ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதே ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பூஞ்சோலையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலுக்குச் செல்வது பரோபகார சிந்தனையை வலுப்படுத்துகிறது. கூட்டு மனப்பான்மையை உயர்ந்தோங்க வைக்கிறது. எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குவதால்தான் ஆலயத்தை மையமாகக் கொண்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வாழ்ந்து வருகின்றனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது என்றென்றும் குன்றென நிமிர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி