சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புணேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
கடந்த காலங்களில் நம் நாட்டின் மீதான படையெடுப்புகள் வெளிப்படையாக தெரிந்தன. அதனால் மக்கள் விழிப்புடன் செயல்பட்டனர். ஆனால் இப்போது பல்வேறு வடிவங்களில் அவை நடக்கின்றன.அவ்வாறு நடக்கும் தாக்குதல்கள் பொருளாதாரம், ஆன்மிகம், அரசியல் என, பல வழிகளிலும் பேரழிவை ஏற்படுத்துகின்றன.
உலக அரங்கில் மிகப் பெரிய நாடாக பாரதம் வளர்ச்சி அடைவது சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நம் வளர்ச்சிப் பாதையில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் போடப்படும் அந்த தடைகளை நாம் உடைத்தெறிவோம். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது.
இதைப் பார்த்து நாம் அச்சப்பட தேவையில்லை. இதே போன்ற ஒரு நிலைமை சத்ரபதி சிவாஜி காலத்திலும் நமக்கு ஏற்பட்டது. அதில் இருந்து நாம் புத்துயிர் பெற்று எழுந்து வந்தோம். மகத்தான மனிதர்கள் மற்றும் மகான்களின் ஆசீர்வாதங்களாலும், உத்வேகத்தாலும் என்றைக்கும் அழிவில்லாத நாடாக மாறியது.
மற்ற நாடுகள், போராட்டத்துக்காகவும், பிழைப்புக்காகவும் உருவானவை. ஆனால் வசுதைவ குடும்பகம் என்ற, ‘இந்த உலகமே ஒரு குடும்பம்’ என்னும் மகத்தான கருத்தை நிரூபிக்கவே பாரதம் உருவானது.
ஒற்றுமை என்ற ஒற்றை சரடு தர்மத்தில் இருந்து உருவானது. தர்மம் என்பது பூஜை, சடங்குகள், இதை உண்ணாதே, அதை தொடாதே என அர்த்தமல்ல. தர்மம் என்பது உண்மை, கருணை, தவம்.
சுபாஷ் சந்திர போஸ் எழுதிய, ‘இந்தியன் ரெசிஸ்டென்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அதன் முதல் அத்தியாயத்தில், தங்களால் தான் இந்தியா ஒரு நாடாக உருவானது. இல்லையெனில் அது பல மாநிலங்களின் தொகுப்பு என ஆங்கிலேயர்கள் நினைத்ததாகவும் அந்த கருத்து தவறானது என்றும் பதிவு செய்துள்ளார்.
ஹிந்து தர்மத்தால் தான் பாரத கண்டம் ஒற்றுமையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிந்து என்ற வார்த்தை அப்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் சற்றும் தயக்கமின்றி சுபாஷ் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஹிந்து என்பது வெறும் சொல் மட்டுமல்ல. பல்வேறு வேறுபாடுகளையும் தயக்கமின்றி அது ஏற்றுக் கொள்கிறது.
எனவே தான் சத்ரபதி சிவாஜி காலத்தில் மராத்தியர்கள் தமிழகத்தின் தஞ்சைக்கு சென்றபோது அவர்களை வெளி ஆட்களாக நடத்தப்படவில்லை. அவர்களின் பணி மற்றும் நடத்தையால் தமிழகத்தில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர் என்றார்.