தெற்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்தின் உக்கிர விளைவுகளை உணர்ந்து கொண்டிருக்கிறோம். வெயிலும் உக்கிரமாக உள்ளது. மழையும் அளவுக்கு அதிகமாக பொழிகிறது. ஒருபுறம் வெப்ப அலை வீசுகிறது. மறுபுறம் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டுகிறது. இவ்வருடம் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களிலும் மிக அதிக அளவு வெப்பம் ஆசியா கண்டத்தில் பதிவாகியுள்ளது. புவி வெப்பம் உயர்ந்து வருவதும், அதை மறுபுறம் எல்நினோ உக்கிரப்படுத்துவதும் சேர்ந்து கொள்வதால் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றுபட்டதால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்துமகா சமுத்திரம் கொதிக்கிறது. பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடல் வெப்பம் மேலும் அதிகரித்து விடும். மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்புக்கு இலக்காக நேரிடும்.
வெப்ப அலை காரணமாக ஏழை எளிய மக்களே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். பூமாதாவை எந்த வகையிலும் வதைக்கக்கூடாது. பூமாதாவை நாம் போற்ற வேண்டும், வழிபட வேண்டும். பருவநிலை மாற்றம் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. தண்ணீரின் தரம் சீர்குலைகிறது. சுவாசிக்கும் காற்று மாசுபடுவதால் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், காற்று போன்ற அனைத்தும் மாசுபடுவதால் மனிதர்களின் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. நம் நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மிகவும் குறைந்த அளவே வாக்குப் பதிவாகியுள்ளது. இதற்கு அந்தப் பகுதிகளில் வெப்ப அலை வீசியதும் ஒரு காரணம். இதை ஒரு அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு சுற்றுச்சூழலை காக்கின்ற நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.
நமது பாரதப் பண்பாடு பன்மைத் தன்மையைப் போற்றுகிறது. சனாதன தர்மம் எப்போது தோன்றியது என்பதை கண்டறிய முடியாது. அது மிகவும் தொன்மையானது. நமது வேதங்களில் இயற்கையை ஆராதிப்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லா ஜீவராசிகளையும் மதிக்க வேண்டும். இறைமை சர்வசக்தி வாய்ந்தது. எல்லா இடத்திலும் பிரசன்னமாகி இருப்பதும் இறைமையே. அறிவியலுக்கும், இறையியலுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. சமாதான சகவாழ்வு கோட்பாட்டையும் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் உபநிஷதங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆய்வாளர் எர்வின் சுரோடிங்கர், அறிவியலை கிரகித்துக் கொள்ள ஆன்மிகம் துணை புரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது. சாலப் பொருத்தமே. பஞ்சபூதங்களையும் வழிபடும் மரபு காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மலைகளை, மரங்களை, நதிகளை, விலங்குகளையெல்லாம் நாம் மதிக்கிறோம். சுற்றுச்சூழல் சீராக இருப்பதற்கு இவையாவும் பங்களிப்பு நல்குகின்றன. வயல்களை உழுவதற்கு முன்பு பூஜை செய்யும் மரபு இப்போதும் உள்ளது. இதைப் போல ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்பு மானசீகமாக இறைவனிடம் அனுமதியைக் கேட்பதும் நடைமுறையில் உள்ளது. இயற்கையை காயப்படுத்தக் கூடாது. இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும். “நான் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளேன். தொடக்கமும், மையமும், அந்தமும் நானே. எல்லாவற்றையும் மதிக்க வேண்டும். ஆரத்தில் முத்துகள் கோக்கப்பட்டிருப்பதைப் போல உலகத்தில் நாம் கோக்கப்பட்டிருக்கிறோம்’’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளது எக்காலத்துக்கும் ஏற்புடையதே. மகாவிஷ்ணு பார்க்கடலில் பாம்பணையில் படுத்துறங்குகிறார். ராமபிரான் சீதா தேவியை மீட்பதற்காக இலங்கைக்கு செல்கிறார். அவருக்கு வானரங்கள் உதவுகின்றன. வானரங்களை ராமபிரான் மிகவும் நேசித்தார். இறைவனுக்குப் புறம்பானது எதுவுமே இல்லை.
முன்பெல்லாம் போதுமென மனமே பொன் செய்யும் மருந்து என்ற மனோபாவம் மேலோங்கி இருந்தது. அளவோடு துய்க்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்தான் என்றெல்லாம் நம் முன்னோர் கூறியதை நாம் ஒருபோதும் புறந்தள்ளக் கூடாது. இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. நம் முன்னோர் இதை பத்திரமாகப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். இதை எதிர்கால சந்ததியினரிடம் பத்திரமாக பாதுகாத்து ஒப்படைக்க வேண்டியது நமது தலையாய கடமை.
இயற்கை நம்மை வதைக்காது, வஞ்சிக்காது. ஆனால் அதே நேரத்தில் இயற்கையை நாம் துன்புறுத்தினால், அல்லல்படுத்தினால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையே நிகழ்கால சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இயற்கையைத் தகர்த்தால் இன்னல், இயற்கையைத் தழுவினால் தன்னல் என்பதை நெஞ்சத்தின் ஆழத்தில் ஒவ்வொருவரும் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்: துணைவேந்தர்,
மத்திய பல்கலைக்கழகம், பதிண்தா
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி