பாரத பொருளாதாரத்தை வீழ்த்த அதானியை குறிவைக்கும் தீயசக்திகள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி காலம் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். ஜோ பைடன் கடைசி கட்ட நடவடிக்கையாக தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்மூலம் குற்ற நடவடிக்கை சார்ந்த தண்டனையிலிருந்து ஹண்டர் பைடன் விடுவிக்கப்பட்டு விட்டார். அமெரிக்காவில் நீதித்துறையில் தலையீடு உள்ளது. ராணுவத் துறையிலும் தலையீடு உள்ளது. அமெரிக்க விவகாரங்களை உன்னிப்பாக அலசினால் இதை புரிந்து கொள்ளலாம்.

கடந்த ௧௦ ஆண்டுகளாக வளர்ச்சி பாதையில் பாரதம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தை மேற்கொண்ட தருணத்தில் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்க நீதிமன்றத்தில் பாரத அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார். நம் நாட்டில் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அது பயங்கரவாத அமைப்பு என்பது பாரத அரசின் முடிவாகும். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க நீதிமன்றத்தில் நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுக்கு எதிராக பன்னூன் வழக்கு தொடுத்துள்ளார். பிரதமர் மோடியை களங்கப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாரத வளர்ச்சியைக் கண்டு பொறாமை

சில தீய சக்திகள் பாரதத்தின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. பாரதத்தில் பேச்சுரிமை, எழுத்து உரிமை குந்தகப்படுத்தப்படுகிறது. பாரதத்தில் பாகிஸ்தானை விட பட்டினி உக்கிரமாக உள்ளது. பாரதத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் சில தன்னார்வ அமைப்புகள் உண்மைக்குப் புறம்பான பிம்பங்களை வெளிப்படுத்தி வருகின்றன. இவற்றுக்குப் பின்னால் பல நிழல் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்த கோணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வக்கிரமான எண்ணம் கொண்ட கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸின் அணுகுமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர். குடியரசுக் கட்சிக்கு எதிரானவர். ஓ.சி.சி.ஆர்.பி என்ற நிறுவனத்துக்கு சோரஸ் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வருகிறார். இந்த நிழல் அமைப்பு பாரதத்தில் பல்வேறு துறைகளில் ஊடுருவி உள்ளது. அரசியலிலும் இது அடாவடித்தனத்தை அரங்கேற்றி வருகிறது.

சோரஸின் எடுப்பிடியானது கென்யா

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கூறப்பட்டதற்கு பாரதத்தின் பொருளாதாரத்தை வலுவிழக்க வைக்க வேண்டும் என்ற மோசமான உள்நோக்கமே பிரதான காரணம். இந்த பிரச்சினையை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2.5 பில்லியன் மதிப்பிலான திட்டத்தை கென்யா ரத்து செய்து விட்டது. ஜார்ஜ் சோரஸின் வாரிசான அலெக்ஸ் சோரஸும், கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் சோரஸ் பின்புலத்தில் இயங்கிவரும் தன்னார்வ நிறுவனத்தின் தலைவராக உள்ள பெனபர் நவ்ரோஜியின் பூர்வீகம் கென்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத  பொருளாதாரத்தை  முடக்க  சூழ்ச்சி

ஓ.சி.சி.ஆர்.பி நிழல் அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சிக்குப் பின்னணியில் இந்த அமைப்பு நீக்கமற நிறைந்துள்ளது. அமெரிக்காவின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆமாம் என்று கூற பாரதம் தயாராக இல்லை. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பாரதம் நிறுத்தவில்லை. தன்னை மீறி பாரதம் செயல்படுவதை அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் அமெரிக்காவை விஞ்சும் வகையில் பாரதம் பொருளாதார ரீதியாக வெகுவேகமாக வளர்ந்தோங்கி வருகிறது.

தொழில் வளர்ச்சியில் பாரதம் முன்னிலை

ரிலையன்ஸ், டாடா, அதானி, வேதாந்தா, பிர்லா, எல்.என்.டி. ஆகிய பாரத நிறுவனங்கள் சர்வதேச அளவில் பொருளாதார வல்லமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதானி குழுமம் விமான நிலையங்களையும், துறை
முகங்களையும் நிர்வகிப்பதில் முதன்மை பெற்றுள்ளது. பசுமை எரிசக்தியிலும் அது வலுவாக தடம் பதித்து வருகிறது. இதைப்
போல மற்ற தொழில் நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகின்றன.

2027−-28ல் பாரதப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை (425 லட்சம் கோடி) எட்ட வேண்டும், 2034-−35ல் இது 10 டிரில்லியன் டாலராக வளர்ந்
தோங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவது தீயசக்திகளுக்கு உறுத்தலாக இருக்கிறது. 2030ல் ஏற்றுமதியை 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த பாரதம் தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதை அமெரிக்காவால் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எரிச்சலால்தான் சோரஸ் போன்றோர் விஷமத்
தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். (௧ டிரில்லியன் டாலர் = ௮௫ லட்சம் கோடி)

வளர்ச்சிக்கு வித்திட்ட கேரள அரசு

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. விழிஞ்ஞம் துறைமுகத்தை அதானி குழுமம் மேம்படுத்தி வருகிறது. இதில் மேலும் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து விரிவாக்க உத்தேசித்துள்ளது. இதை தடுக்க பல்வேறு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கேரள மார்க்சிஸ்ட் அரசு அதானி குழுமத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதானி குழுமத்தை பொருளாதார ரீதியாக வீழ்த்த வேண்டும் என்பது இடைநிலை சார்ந்த இலக்குதான். தீயசக்திகளின் இறுதி இலக்கு. பாரத பொருளாதார எழுச்சியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் தீய சக்திகளின் எண்ணம். இலங்கை, இஸ்ரேல், தான்சானியா உள்ளிட்ட பல நாடுகளில் அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த நாடும் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முற்படவில்லை. இதிலிருந்தே அதானி குழுமம் செம்மையாக செயல்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், நார்வே நாட்டைச் சேர்ந்த ராஜதந்திரியுமான எரிக்சோல்ஹிம், அமெரிக்கா அடுத்த நாடுகளின் விவகாரங்களில் அத்துமீறி நுழைகிறது. இதனால்தான் வேண்டுமென்றே சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனப் பொருளாதாரம் 18 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. பொருளாதார பத்திரிகையான ‘பார்ச்சூன் 500’ அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் தொழில் நிறுவனங்கள் மூன்றில் 2 பங்கு வகிக்கின்றன. இப்படி இருக்கும்போது மற்ற நாடுகளிலும் பெரும் தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்க பங்கை வகிப்பதில் தவறு என்ன?

பாரத தொழிலதிபர்களை எதிர்க்கும் ராகுல்

ஓ.சி.சி.ஆர்.பியின் வலையில் ராகுல் காந்தி போன்றோர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம் அதானி விவகாரத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்துவதற்கும், அமளியில் ஈடுபடு
வதற்கும் இந்த சதிதான் மூலகாரணம். பாஜக எம்.பி சாம்பித் பத்ரா, ஜார்ஜ் சோரஸின் அமைப்பான ஓ.சி.சி.ஆர்.பியின் கைப்பாவையாக ராகுல்காந்தி இயங்கி வருகிறார் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சோரஸின் எடுபிடியான ராகுல்

சோரஸ்–ராகுல்–ஓ.சி.சி.ஆர்.பி. அபாயகரமான முக்கோணம் என்றும் ஜாம்பித் பத்ரா விளாசியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் அதிபர்களின் பங்களிப்பு அவசியம். இதை சீர்குலைத்து பொருளாதாரத்தை நிலைகுலைய வைப்பதற்காக அதானி விவகாரத்தை அஸ்திரமாக தீயசக்திகள் பிரயோகிக்கின்றன. ஆனால் இந்த சதி முற்றிலுமாக சிதறிக்கப்பட்டுவிடும் என்பதை சமீபகால நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கட்டுரையாளர்: பாதுகாப்பியல் ஆய்வாளர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி