பாரத குடிமக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டவிரோத  ஊடுருவல்காரர்கள்

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள பத்வான் கிராமத்தில் இருந்து சமீபத்தில் வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த பிரச்சினை கவனத்தை ஈர்த்தது. அங்கு 181 நபர்கள் (PM––KISAN)  திட்டத்தின்கீழ் நன்மைகளை மோசடியாகப் பெறுவதற்காக போலி ஆவணங்
களை தயாரித்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த நபர்கள் வங்காளதேச மற்றும் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா குடியேறிகள் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. மேற்படி மோசடி தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது,   மகாராஷ்டிராவை விட மேற்கு வங்காளத்தில் அதிக அளவிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பாதிக்கிறது மற்றும் ஊதிய கட்டமைப்பைச் சீர்குலைக்கிறது. சட்ட விரோதக் குடியேறிகள் விவசாய மற்றும் வன நிலங்களை ஆக்கிரமிப்பது, உள்ளூர் மக்களுடன் மோதல்களுக்கு வழிவகுக்கிறது.  சரியான அடையாள அமைப்பு இல்லாததால், சட்டவிரோதக் குடியேறிகள் சில சமயங்களில்  பாரதிய குடிமக்களுக்கான நலத்திட்டங்களை அணுக முடிகிறது. இதனால் இத்திட்டங்களின் பலன்கள் நீர்த்துப் போகின்றன. மேலும், சிறுபான்மையினர் உதவித்தொகையைப் பெற்றவர்களில் ஊடுருவியவர்கள் இருப்பது, உள்ளுர் சிறுபான்மையினருக்கு  உதவித்தொகை கிடைக்காமல் போக வழிவகுக்கிறது.  இந்த மோசடிகள் பல மாநிலங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 மில்லியன்  ஏழை பாரதியர்கள் அரசாங்க ரேஷன் பொருட்கள்பெறுவதை  இழந்துள்ளனர்.  விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம், விதை மானியம், பயிர்க்காப்பீடு போன்ற திட்டங்களில் ஊடுருவியவர்கள் ஆதாயம் பெறுவதால், நம் நாட்டின் விவசாயிகள் முழுமையாகப் பயனடைய முடியாத நிலை ஏற்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை பாரதியக் குடிமக்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதக் குடியேறிகளும் இந்த சேவைகளைப் பயன்படுத்துவதால், ஏற்கனவே குறைவான வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து, உள்ளூர் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சிகிச்சை தாமதமாகிறது அல்லது தரமற்றதாக மாறுகிறது. போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதக் குடியேறிகள் இத்திட்டங்களின் கீழ் சிகிச்சை பெறுவதால், உள்ளூர் மக்கள் சில சமயங்களில் சரியான நேரத்தில் அல்லது  முறையாக  சிகிச்சை  பெற முடியாமல் போகிறது.

அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி, மதிய உணவு போன்ற சலுகைகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைக்கிறது. சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் சேருவதால், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் பாதிக்கப் பட்டு, கல்வித்தரம் குறைகிறது. மேலும்,  இடஒதுக்கீடு போன்ற சலுகைகளில் பாரதிய குடிமக்கள் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.
இத்தகைய போக்கு மாற வேண்டுமானால், உடனடியாக தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த இழப்புகள் பாரதத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதும், அரசு சலுகைகள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதும் மிக அவசியமாகிறது