பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!

பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று எத்தனையோ நல்ல பண்புகள் கிராம மக்களின் வாழ்வில் பதிந்து கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒருசில:

கல்லமநாயக்கன்பட்டி

ஒன்றுபட்டார்கள், தண்ணீர் கஷ்டம் தீர்ந்தது.

பட்டாசு பூமி சிவகாசிக்கு பக்கத்தில் சின்னஞ்சிறு கிராமம் கல்லமநாயக்கன்பட்டி கடந்த 20 ஆண்டுகளாக அங்கே குடிதண்ணீர் கஷ்டம். தமிழகத்தில், அதுவும் வறண்ட சிவகாசிப் பகுதியில் தண்ணீர் கஷ்டம் என்றால் அதில் என்ன புதுமை?  தண்ணீர் கஷ்டத்தை அந்த ஊர் மக்கள் தீர்த்துக் கொண்ட விதம்தான் புதுமை. 600 குடும்பங்கள் வசிக்கும் அந்த ஊரில் கிராமவாசிகள் ஒரு கூட்டம் போட்டார்கள்.

எல்லோரும் கைக்காசு போட்டு ஊரில் ஒரு தானியங்கி குடிதண்ணீர் வழங்கும் இயந்திரம் நிறுவினார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டது. அதை இயந்திரத்தில் ஸ்கேன் செய்தால் போதும். வீட்டுக்குத் தேவையான குடிதண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்லலாம். அங்கே குடிதண்ணீர் கிடைப்பது மேலும் சிரமமாகி விடவே இப்போது ஒரு ஸ்மார்ட் கார்டுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் என்று ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள். சேதாரம் தவிர்த்தார்கள். இதனால் ஊரிலுள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கும், அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், நூலகத்திற்கும் குடிதண்ணீர் வழங்கமுடிகிறது. குடிதண்ணீர் கஷ்டம் என்றதும் கல்லமநாயக்கன்பட்டி கிராமவாசிகள் காலிக் குடம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று வீதிக்கு வராமல், ஒற்றுமையாக அமர்ந்து சொந்தப் பணம்போட்டு, தீர்வை அடைந்து காட்டியிருக்கிறார்கள். அரசின் உதவியை நாடி கைகட்டி நிற்கவில்லை. தண்ணீரை பணம்போல ATM – ல் எடுத்து பயன்படுத்துகிறார்கள். கல்லமநாயக்கன்பட்டி வாசிகள்.

 ஒரே வித்தியாசம், தண்ணீர் இங்கே முற்றிலும் இலவசம்!

ஆதாரம்: 2018 ஏப்ரல் 2 த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

பவுரி கட்வால்

உலக வங்கிப் பணம் வேண்டாம், உழைப்பே உயர்வு

ஒரு ஆசிரியர், ஒரு தபால்காரர், ஒரு மளிகைக் கடைக்காரர், ஒரு ஆயுர்வேத வைத்தியர் – ஆகியோர் கொண்ட இந்த அணி 136 சிற்றூர்களில் 700 ஹெக்டேர் அளவுக்கு காடு வளர்த்து 20,000 குட்டைகள் அமைத்துள்ளது. இதற்கு 30 ஆண்டுக்காலம் இவர்கள் மக்களுக்கு ஊக்கமளித்து வந்தார்கள். உத்தரகண்ட் மாநிலம் பவுரி கட்வாலின் துதாடோலி வட்டாரத்தில்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது.

ஒரு ஊரில் காடு அழிந்தால் அந்த ஊர்ப் பெண்கள் அடுத்த ஊர் காட்டில் புல்லறுத்து விறகு சேகரித்துக் கொண்டு வர வேண்டும். அந்த ஊர் பஞ்சாயத்து இவர்களுக்கு அபராதம் விதித்துவிடுவதும் உண்டு. இது அவமானம். எனவே காட்டின் அவசியத்தை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.மகளிரே ஊர்க்காட்டை காவல் புரிவார்கள். ஒரு கம்பின் ஒரு நுனியில் மணி கட்டியிருக்கும். வனக்காவல் பணியில் ஒரு பெண் தன் முறை முடிந்ததும் அதை அடுத்த வீட்டு வாசலில் வைத்துவிடுவார். இது அடுத்த  வீட்டுப் பெண்ணின் முறை வருவதைக் காட்ட. இது போல 30 ஆண்டுகள் நாள் தவறாமல் நடந்தது. ஊதியமில்லாமல்தான் வனக் காவல் பணி முழுவதும் நடந்தது. விளைவு, ஊரே வனப் போர்வை போர்த்திக் கொண்டுவிட்டது.

1999 ல் உலக வங்கி இந்த சாதனையைப் பார்த்து 100 கோடி ரூபாய்; தர முன்வந்தது. நால்வர் அணி பணத்தை ஏற்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. காசு வந்தால் காரியம் கெட்டுவிடும்; ஊரார் உழைப்பால் நடந்துள்ள  சாதனையை பணம் பாழாக்கிவிடும் என்கிறார் நால்வரில் ஆசிரியரான சச்சிதானந்த பாரதி.

‘த ஹிந்து’ (22-10-2011)

மடூர்

ஆடு போச்சு, காடு வந்தது டும் டும் டும்

சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்கிற மலைவாசஸ்தலம் ஏற்காடு. அங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள வனவாசி (பழங்குடி) சிற்றூர் மடூர். அந்த ஊரில் வெள்ளாடு வைத்திருந்த அனைவரும் தங்கள் எல்லா ஆடுகளையும் விற்று ஊரிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். வனத்துறையினர் துவங்க இருந்த வனமயமாக்கும் திட்டத்திற்கு உதவுவதற்காகவே ஆடுகளுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி.

அந்த வனவாசிமக்களுக்கு 340 அடி ஆழத்திற்கு போர்வெல் போட்டு மேல்நிலைத் தொட்டி கட்டி குடிதண்ணீர் கிடைக்கச் செய்திருந்தது வனத்துறை. எனவே வனத்துறையுடன் இவ்வாறு ஊர்மக்கள் ஒத்துழைத்தார்கள். விரைவிலேயே 300 ஹெக்டேர் பரப்பில் ஒருலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. 60,000 கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டன.

‘தினமணி’ நாளிதழ் செய்தி

 

தளிஞ்சி

நிலம் பொதுவானது, வெள்ளாமை வீடு வீடாக

உடுமலைப்பேட்டை – அமராவதி வட்டாரத்தில் உள்ளது தளிஞ்சி என்ற சிற்றூர். அந்த ஊரை அடைவதற்கு சம்பக்காடு வனப்பகுதியில் 5 மைலாவது நடக்கவேண்டும். அந்த ஊர் மக்களில் எவருக்கும் சொந்தமாக நிலம் கிடையாது என்பதுதான் புதுமை. ஆனால் ஊருக்கென்று 900 ஏக்கர் நிலம் உண்டு. ஒரு குடும்பம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பயிர் செய்து விளைச்சலை எடுத்துக்கொள்வார்கள். இதுபோல ஊரார் அத்தனைபேரும் முறை வைத்து பயிர்செய்து பயன் எடுப்பார்கள்.

அருகிலேயே ஓடும் தேனாறு, வற்றாத நதி. எனவே தண்ணீர் கஷ்டம் இல்லை. ஆனால் அந்த வேளாண் பெருமக்களின் விவேகமான பகிர்வு எந்தவொரு விவசாய நிபுணரின் பங்களிப்பும் அல்ல. அந்த ஊர் மக்கள் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் செம்மையான பாரம்பரியம் அது. சொந்த நிலம் கிடையாது. ஆனால் முறைவைத்து பயிர்செய்யும் ஒழுங்கு உண்டு.

2003, மார்ச் 1 – 15 ‘ஒரே நாடு’ இதழில் பத்திரிகையாளர்

ஆர்.பி. முருகேசன் எழுதிய கட்டுரையிலிருந்து

 

நிம்பல்

ஆன்ம சக்திக்கு கட்டுப்பட்டார்கள், ஒழிந்தது மது

கர்நாடகா மாநிலம் நிம்பல் என்ற சிற்றூரில் மது அடியோடு ஒழிக்கப்பட்டது. ஒழித்தவர்கள் அந்த ஊர் பெண்மணிகள். அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தவர் ஸ்ரீ ஜாட்ய சாந்தலிங்கேஸ்வர ஸ்வாமி என்ற துறவி.

இவர் வீடுவீடாக போய் வீட்டில் அனைவரின் நலம் விசாரிப்பார். ஆண்டுமுழுவதும் மௌனவிரதம் அனுஷ்டிக்கும் இவர் யுகாதியன்று மட்டுமே பேசுவார். எனவே இவர் மது ஒழிப்பில் பெண்மணிகளை ஈடுபடுத்தியது எல்லாம் சைகை மூலம்தான். அடியோடு மதுவை ஒழிக்காவிட்டால் அந்த ஊருக்கு தான் வரப்போவது இல்லை என்று அவர் அன்பான மிரட்டலே விடுத்திருந்தார். ஊரில் இருந்த மூன்று சாராயக்கடைகளை மூடியதுடன் நிற்காமல் ஊர் கமிட்டியினர், சாராயம் குடித்துவிட்டு வருகிறவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்கினார்கள். லட்சியம் நிறைவேறியது. ஸ்வாமிஜி திரும்பி வந்தார். அவர் முன்னிலையில் ‘இனி இந்த ஊரில் யாரும் வெளியில் மலம் கழிக்கமாட்டோம்’ என்று சபதம் எடுத்தார்கள்.

 

போகரண்

ரகசியம் காத்தார்கள், தேசம் அணு ஆயுதம் தாங்கியது.

ராஜஸ்தான் பாலைவனத்தின் நடுவில் உள்ள சிற்றூர் போகரண் (இதை பொக்ரான் என்று தப்பும் தவறுமாக ஊடகம் அச்சிடுவது உண்டு). அங்கே 1974ல் ஒருமுறையும் 1998ல் இன்னொரு முறையும் அங்கே அணு வெடிப்பு சோதனை நடந்தது.

இரண்டாவதாக நடந்த சோதனைக்கு சற்று முன்னதாக ராணுவ அதிகாரி ஒருவர் அந்த ஊர் மக்களிடம் பேச்சுக்கொடுத்தார்.  பட்டாளத்துக்காரங்க சிலபேர் வந்துபோவாங்க அது ரோந்துக்காக” என்று சொன்னார். உடனே ஊர் மக்கள், சார், எங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அணுகுண்டுதானே?” என்று கேட்டதுடன் கவலைப்படாதீர்கள் நாங்கள் ரகசியத்தைக் கட்டிக் காப்போம்.” என்று தாங்களாக உறுதியளித்தார்கள். அவ்வாறே செய்தார்கள்.

அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. தனது கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் மூலம் கூட அணுவெடிப்பு சோதனை நடந்த அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

1998 ‘இந்தியா டுடே’ அட்டைப்படக் கட்டுரையிலிருந்து

 

கிராமவாசி, வனவாசி, பாரதவாசியே!

காளிமலை வனயாத்ரா

குமரி மாவட்டத்தின் 48 வனவாசி கிராமங்களில் 1553 வனவாசி குடும்பங்கள் வசிக்கின்றன. ஜில்லாவின் பல பகுதிகளிலிருந்து தாய்மார்கள் உட்பட 1885 பேர் யாத்திரை செய்தனர். கிராமத்திற்கு 20-25 பேர் வீடு வீடாகச் சென்று திருவிளக்கேற்றி பாடல்கள் பாடினர்.

73 வயது அன்பர் ஒருவர் முதன்முறையாக ஒரு ஹிந்து குழு வந்ததை மிகவும் பாராட்டினார். இந்த யாத்திரை பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்பணியாக தீபாவளியை ஒட்டி கிராம மக்கள் அனைவரையும் ஆற்றூர் அழைத்து வந்து 2 நாள் தங்கவைத்து விருந்தளித்து புத்தாடைகள் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

தற்போது 20 பண்பாட்டு வகுப்புகளும் 24 கல்விதான மையங்களும் அங்கு நடந்து வருகிறது. இதனை கவனித்துக்கொள்ள வனவாசி சமூகத்தை சேர்ந்த 20 முழு நேர ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.