பாரதிய சாட்சிய அதிநியம் 2023

இந்திய சாட்சிய சட்டம், 1872 தற்போது பாரதிய சாட்சிய அதிநியம், 2023 எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்தச் சட்டமானது, ராணுவச் சட்டம், 1950 கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம் அல்லது இந்திய கடற்படை ஒழுங்கு முறைச் சட்டம், 1934 அல்லது விமானப்படைச் சட்டம், 1950 ஆகிய சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள “கோர்ட் மார்ஷல்” எனப்படும் ராணுவ நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை, ராணுவ நீதிமன்றங்களுக்கு இந்திய சாட்சிய சட்டம், 1972 பொருந்தாது என்றிருந்தது, தற்போது மாற்றப்பட்டுள்ளது.

  இந்திய சாட்சிய சட்டம் 1972லிருந்து விரிவுபடுத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சாட்சியத்தை தற்கால உலகின் சூழ்நிலைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்ப விரிவுபடுத்தி, பாரதிய சாட்சிய அதிநியம், 2023 கொண்டு வரப்பட்டது. இதில், டிஜிட்டல் சாட்சியம் சட்டப்படி ஏற்புடைய சாட்சியமாகும். அலைபேசியிலிருந்து பேசுவது, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், எக்ஸ்தளம் போன்றவற்றில் செய்யப்படும் பதிவுகள் சாட்சியமாக ஏற்கப்படுவதால், குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் புலன் விசாரணையின் போது, அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

”சாட்சியம்” என்பதற்கான விளக்கம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக, பெறப்படும் வாக்குமூலங்கள், சாட்சியமாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாட்சிகளின் சாட்சியம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சியம், நிபுணர்களின் சாட்சியம், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம் போன்றவை மின்னணு தகவல் தொடர்பு மூலமாக பதிவு செய்யப்படுவதால், இது வரை ஏற்பட்டு வந்த கால விரயங்கள் தவிர்க்கப்படும்.

பாரதிய சாட்சிய அதிநியம், 2023 பிரிவு 57-ன் கீழ் மின்னணு மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் தற்போது முதன்மை சாட்சியமாக ஏற்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம், தொழில்நுட்பம் வாயிலாக, முதன்மை சாட்சி
யங்கள் அதிகளவில் பதிவு செய்ய வாய்ப்புள்ளதால் நீதிமன்ற விசாரணைகள் துரிதமாக நடக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

 பாரதிய சாட்சிய அதிநியம், 2023 சட்டத்தில் ஆங்கிலேய காலனி ஆதிக்க “வக்கீல்” “ப்ளீடர்” மற்றும் “பாரிஸ்டர்” போன்ற சொற்றொடர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு, நவீனமாக சட்ட மொழியில் ஏற்பட்டுள்ள வார்த்தையான “வழக்கறிஞர்” என்ற பதம் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட வேண்டும்.

 பாரதிய சாட்சிய அதிநியம், 2023 சட்டத்தின் மூலமாக ஆங்கிலேய காலனி ஆதிக்க சொற்றொடர்களான ‘‘இங்கிலாந்து பாராளுமன்றம்’’ ‘‘பிராந்திய சட்டம்’’ ‘‘இங்கிலாந்து அரசின் பிரதிநிதி’’ ‘‘லண்டன் கெஜட்” “டொமினியன்” “காலனி’’ ‘‘இங்கிலாந்து அரசரின் உடைமை’’ “ஜூரி” “லாகூர்” “யுனெடெட் கிங்டம் ஆஃப் கிரேட்டர் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து” “காமன் வெல்த்” ‘‘ஹெர் மெஜஸ்டி’’ “ப்ரீவி கவுன்சில்” “ஹெர் மெஜஸடிஸ் கவர்ன்மெண்ட்” “க்வின்ஸ் பிரிண்டர்” “பிரிட்டிஷ் கிரவுன்” “இங்கிலாந்தின் நீதிமன்றம்” “ஹெர் மெஜஸடிஸ் டொமினியன்” ஆகியவை அறவே நீக்கப்பட்டுள்ளன.

பாரதிய சாட்சிய அதிநியம், 2023 பிரிவு 22-ன் கீழ் குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பதற்கு விலக்கு அளிக்கும் செயலாக “வற்புறுத்தல்” என்ற விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வது என்பதை வைத்து அவருக்கு தண்டனை அளிக்க இயலாது.

ஆக, எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் மேற்படி பாரதிய சாட்சிய அதிநியம், 2023 காலத்தின் கட்டாயமாகும். கால நேர சூழ்நிலைகளுக்கு ஏற்ப, முன்னேற்றப் பாதைகயில் நாடு செல்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. குற்றவியல் நீதி பரிபாலண அமைப்பின் நிர்வாகத்தில், ஒரு முன்னேற்றப் பாதையில் இந்த பாரதிய சாட்சிய அதிநியம், 2023 நம்மை வழி நடத்துகின்றது.

கட்டுரையாளர்:

மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்-

சென்னை உயர்நீதிமன்றம்.