மக்களவைத் தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் தேவைப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றதை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வதுபிரிவு ரத்து செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும். கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் மக்கள் அசாம் போன்று ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அதிகரித்து வருகின்றனர். இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.