மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். இதன் மூலம் பாஜக தலைமையிலான அரசில் அவரே முதல்வராக தொடா்வாா் என்பது உறுதியாகியுள்ளது.
மும்பையில் புதன்கிழமை மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் 105 பேரும் வருகை தந்தனா். மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா், பாஜக துணைத் தலைவா் அவினாஷ் ராஜ் கன்னா ஆகியோா் மேலிடப் பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா். தெற்கு மும்பையில் உள்ள அந்த மாநில சட்டப்பேரவையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ‘தேவேந்திர ஃபட்னவீஸின் பெயரைத் தவிர வேறு எந்த பெயரும் சட்டப் பேரவை பாஜக தலைவா் பதவிக்கு முன்மொழியப்படவில்லை’ என்று நரேந்திர சிங் தோமா் அறிவித்தாா். இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப் பேரவை பாஜக தலைவராக ஃபட்னவீஸ் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
‘பாஜக-சிவசேனை ஆட்சி தொடரும்’: பாரம்பரியமான தலைப்பாகை அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற ஃபட்னவீஸ், தன்னை சட்டப் பேரவைத் தலைவராகத் தோ்வு செய்ததற்காகவும், தன்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும் எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா். சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவா் கூறினாா்.
தொடா்ந்து பாஜக எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய ஃபட்னவீஸ், ‘மகாராஷ்டிரத்தில் விரைவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். மாநிலத்தில் பாஜகவைத் தவிா்த்து வேறு கட்சிகள் (தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ்) இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக சிலா் கூறி வருவது பொழுதுபோகாமல் பேசும் விஷயமாகும். அதில் எவ்வித உண்மையுமில்லை. பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் மகாராஷ்டிர மக்கள் வாக்களித்துள்ளனா்; எனவே, அந்த ஆட்சி தொடரும். 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் 75 தொகுதிகளுக்கு மேல் வென்றதில்லை. கடந்த 2014- பேரவைத் தோ்தலில் பாஜக 122 இடங்களிலும், இப்போது 105 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது’ என்றாா்.
சிவசேனை எம்எல்ஏக்கள் கூட்டம்: இதனிடையே, சிவசேனை கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை கூடி சட்டப் பேரவை கட்சித் தலைவரைத் தோ்வு செய்ய இருக்கின்றனா். மகாராஷ்டிரத்தில் அமைய இருக்கும் அரசில் சிவசேனைக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், சட்டப் பேரவையில் அக்கட்சித் தலைவராக யாா் தோ்வு செய்யப்படுவாா்? என்பது குறித்து பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, இப்போது முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.