‘எல்லையில் இருந்து சீன ராணுவம் தன் படைகளை விலக்கி கொள்ளாத வரை, நாங்களும் படைகளை விலக்கிக் கொள்ள மாட்டோம்’ என, நம் ராணுவம் உறுதிபடக் கூறியுள்ளது.
கிழக்கு லடாக்கில், நம் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் சீன ராணுவம் நுழைந்தது. அதையடுத்து நம் படைகளும் எல்லைக்கு அனுப்பப்பட்டன.இந்த நிலையில், ஜூன், 15ம் தேதி நடந்த மோதலில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர்.அதையடுத்து, பிரச்னை தீவிரமாவதை தடுக்கவும், படைகள் விலக்கி கொள்வது குறித்தும், பல கட்ட பேச்சுகள் நடந்தன.
குறிப்பாக, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான கூட்டத்தில், படைகளை விலக்கி கொள்வது குறித்து பேசப்பட்டது.பேச்சின் அடிப்படையில், எல்லையில் இருந்து இரு படைகளும் சிறிது துாரத்துக்கு விலக்கி கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து எல்லையில், படைகள் முகாமிட்டுள்ளதால், பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, ஐந்தாம் கட்ட பேச்சு சமீபத்தில் நடந்தது.அப்போது, பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள, பிங்கர் – 3 பகுதியில் இருந்து இந்தியா தன் படைகளை விலக்கி கொண்டால், தாங்களும் படைகள் விலக்கி கொள்வதாக, சீனா கூறியுள்ளது.
ஆனால், அந்தப் பகுதி இந்திய எல்லைக்குள் இருப்பதால், படைகளை விலக்கிக் கொள்ள முடியாது என்று, நம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.’சீனா தன் படைகளை திரும்பப் பெறாதவரை, நாங்களும் படைகளை விலக்கி கொள்ள மாட்டோம்’ என, நம் தரப்பில் உறுதிபடக் கூறப்பட்டு உள்ளது.அதனால், ஐந்தாம் கட்ட பேச்சில், முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து, எல்லையில் தற்போதுள்ள நிலை, மேலும் சில மாதங்களுக்கு தொடரும் அபாயம் உள்ளதாக, ராணுவம் தெரிவித்துள்ளது.