பெங்களூரு விதான் சவுதாவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, கர்நாடக சட்டசபையில் நேற்று பா.ஜ.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டசபை முடங்கியது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று முன்தினம், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடந்தது. இதில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேனின் ஆதரவாளர்கள், விதான் சவுதாவில் அவருக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.உசேன் பேட்டி அளித்து கொண்டிருந்த போது, அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று இரண்டு முறை கோஷம் எழுப்பினார்.
இந்த வீடியோ, ‘டிவி’ சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இந்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., தரப்பில் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பா.ஜ., சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரில் எம்.எல்.ஏ.,க்கள் பவனில் இருந்து, தேசியக் கொடியை ஏந்தியபடி, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று காலை விதான் சவுதாவுக்கு வந்தனர்.
சட்டசபை துவங்கியதும் எழுந்து, ‘பாரத் மாதா கீ ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினர். சம்பவம் குறித்து விவாதிக்க வாய்ப்பு தரும்படி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தி பேசினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.
சட்டசபையில் கடும் அமளி நிலவியது. சபாநாயகர் இருக்கை முன், பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதனால், நேற்று முழுதும் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.