பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மின்கட்டண உயர்வு, கோதுமை மாவு விலை உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அவாமி நடவடிக்கை குழு(ஜேஏஏசி) முசாபராபாத்தில் கடந்த சனிக் கிழமை போராட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 90 பேர் காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி மற்றும்கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு பாகிஸ்தான் ரூபாய் 23 பில்லியன் உடனடியாக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் அப்துல் மஜித் கான் அளித்த பேட்டியில், ‘‘மின்சார கட்டணம், கோதுமை மாவு விலை குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியான பிறகும், போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது’’ என்றார்.