நாடு சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட பிரிவினையை அடுத்து, பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. அப்போது, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய காஷ்மீர் மறுத்தது. நீண்ட இழுபறிக்குப் பின், ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
ஆனால், அதற்கு வடக்கே உள்ள 13,297 சதுர கி.மீ., பரப்புள்ள பகுதி, ஆசாதி காஷ்மீர் என்ற பெயரில் தனி பகுதி யாகச் செயல்பட முடிவு செய்தது. இந்தப் பகுதியை பாகிஸ்தான் நிர்வகித்து வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தான், ஆசாதி காஷ்மீர் என்றழைக்கிறது. அதே நேரத்தில் இந்தியா, இந்தப் பகுதியை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதி யாக இருந்த இந்த இடத்தை மீட்பதற்காக மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அங்கு பல மனித உரிமை மீறல்கள் நடப்பதாக நீண்டகாலமாக புகார் உள்ளது.
தன்னாட்சி உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் போலீஸ் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக, மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில், சமீபத்தில் இரண்டு சிறுமியர் உயிரிழந்தனர். இதையடுத்து, மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் மற்றும் ராவலகோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக உள்ளன.
இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து, அங்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோர், பாகிஸ்தான் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்து உள்ளன. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவிட்ட, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்.