தெற்காசியாவின் முக்கியமான மகாசக்தி பீடங்களில் சாரதா பீடமும் ஒன்றாகும். இதை வெறும் கோயில் என்று மட்டும் கூற முடியாது. மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இது திகழ்ந்து வந்துள்ளது. 6ம் நூற்றாண்டிலிருந்தே பாரதத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து அறிவு தாகத்தை தணித்துள்ளனர்.
சாரதா பீடம் மிகவும் தொன்மையானது. புனிதமானது. ஞானபீடமாக விளங்கிய சாரதா பீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே சாரதா பீடத்தின் சிறப்பை மீண்டும் உயர்ந்தோங்க வைக்க முடியும்.
சாரதா பீடம் கவனிப்பின்றி, நாளுக்குநாள் சேதமடைந்து கொண்டே இருக்கிறது. சாரதா பீடத்தை புனர்நிர்மானம் செய்ய வேண்டும். இவ்வாறு புத்துயிர் ஊட்டுவதன் மூலம், கலாச்சார பெருமையை மீட்டெடுக்க முடியும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சாரதா பீடம் உள்ளது.
இந்த சாரதா பீடம் இப்போது பாகிஸ்தான் வசமுள்ள ஜம்மு−காஷ்மீர் பகுதியில் உள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குப்வாரா மாவட்டத்தில் உள்ள தீத்துவால் என்ற இடத்தில் புதிய சாரதா தேவி கோயிலை திறந்து வைத்தார். இது பாகிஸ்தான் வசமுள்ள சாரதா பீடத்திலிருந்து, சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த முன்னெடுப்பு ஆன்மிக மறுமலர்ச்சிக்கானது என்று கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் ராஜதந்திர அம்சமும் அடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கும், பாரதத்துக்கும் இடையே இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இதில் பாதுகாப்பு அம்சம் உள்ளதால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
இரு தரப்புக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையை போக்கினால்தான் இது சாத்தியமாகும். அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் எல்லைப் பகுதியில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. பதற்றமான சூழ்நிலையே மேலோங்கியுள்ளது. இதை படிப்படியாக தணிக்க வேண்டும். அவநம்பிக்கையை போக்குவதுடன், நல்லிணக்கத்தை தழைக்க வைக்க வேண்டும். சமாதானத்தின் வாயிலாகவே இதை சாதிக்க முடியும்.
சாரதா தேவி, சரஸ்வதி தேவியின் உருவம்தான். அறிவின் கடவுள் கலைமகள். தெற்காசியாவின் முக்கியமான மகாசக்தி பீடங்களில் சாரதா பீடமும் ஒன்றாகும். இதை வெறும் கோயில் என்று மட்டும் கூற முடியாது. மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இது திகழ்ந்து வந்துள்ளது. 6ம் நூற்றாண்டிலிருந்தே பாரதத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து தங்கியிருந்து அறிவு தாகத்தை தணித்துள்ளனர்.
இந்த பிராந்தியத்தை குருஜாரா, பிரதிகாரா ராஜ வம்சத்தினர் ஆண்டு வந்துள்ளனர். இதன் பிறகு கால ஓட்டத்தில் வெவ்வேறு ஆட்சியாளர்கள் இப்பிராந்தியத்தை பரிபாலனம் செய்துள்ளனர். இந்த சக்தி கேந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுவதற்கு வலுவான காரணம் உள்ளது.
சக்தியின் வலது கரம் இங்குதான் விழுந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால்தான் 18 மஹா சக்தி பீடங்களில், இது பக்தர்களுக்கு அனுகிரகமும், ஆசியும் வழங்கும் தலமாக கருதப்படுகிறது.
6ம் நூற்றாண்டுக்கும், 12ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த சாரதா பீடம் ஆலயப் பல்கலைக்கழகமாகவே விளங்கியது. இங்கிருந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், சுவடிகள் இருந்தன.
இதனால்தான் உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அறிவு தேடல் ஆர்வலர்கள் இதை நாடி வந்தனர். மதமும், தத்துவமும் மட்டுமல்லாமல், மொழி வளமும் இங்கு செறிந்திருந்தது. சாரதா எழுத்து படிவம் தனித்தன்மை வாய்ந்தது. சமஸ்கிருதத்துக்கும், காஷ்மீரிக்கும் இந்த சாரதா எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த சாரதா பீடத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று கூறியபோதிலும், இது நனவாகவில்லை. சீக்கியர்களுக்காக கார்தர்பூர் நெடுந்தடம் பயன்பாட்டில் உள்ளது. பாரதத்தில் உள்ள சீக்கியர்கள், பாகிஸ்தானில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப்புக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இதைப்போல சாரதா நெடுந்தலத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். இங்குள்ள பக்தர்கள் விசா எதுவும் இன்றி, பாகிஸ்தானில் உள்ள சாரதா பீடத்துக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். சாரதா பீடத்தை சிறந்த முறையில் புனரமைக்க வேண்டும்.
இதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும். சாரதா பீடத்தை டிஜிட்டல் ரீதியாக ஆவணப்படுத்தி, அதன் புகழைப் பரப்ப முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் வழக்கொழிந்து விட்ட சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மொழியியல் அறிஞர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி