பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ட்ரோன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த உளவு தகவலை அடுத்து, தீவிர கண்காணிப்பில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலத்தின் தார்ன் தாரன் மாவட்டத்தின் மியாம்வாலி கிராமத்தில் ட்ரோன் ஒன்று நுழைவதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், பஞ்சாப் போலீஸாரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது டிஜேஐ மேட்ரிஸ் 300 ஆர்டிகே ரக ட்ரோன் கைப்பற்றப்பட்டது. இந்த வகை ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து, பஞ்சாப் பகுதிக்குள் போதைப் பொருள் கடத்த இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன்வாலா குர்த் கிராமத்தில் உள்ள வயலில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், டிஜேஐ மேவிக் 3 கிளாசிக் ரக ட்ரோன் ஒன்று மீட்கப்பட்டது. இதுவும் சீன தயாரிப்பு ட்ரோன். இதில் 500 கிராம் எடையில் ஹெராயின் பொட்டலம் இணைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்கள் மீட்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.