இந்தியாவை பயங்கரவாத நாடாக சித்தரிக்க, அண்டை நாடான, பாக்., மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம், மத்திய அரசு விளக்கம் அளித்து வருகின்றது.பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா நாடியது.
இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், பாக்.,கின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில், இந்த தீர்மானம், இந்தாண்டு மே மாதம் நிறைவேறியது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ள பயங்கரவாத பட்டியலில், 130 பாக்., பயங்கரவாதிகள் மற்றும் 25 அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் சர்வதேச அளவில் பாக்.,குக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.இந்தியாவும் பயங்கரவாத நாடு என்று சித்தரிக்க, பாக்., சதி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களில் மட்டும், ஆறு இந்தியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., புகார் கூறியுள்ளது.
இதற்கு, சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.பாக்., குறிப்பிட்ட அந்த ஆறு பேரும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். முதலில், பாக்., கொடுத்த இரண்டு பெயர்கள் நிராகரிக்கப்பட்டன. அடுத்து இரண்டு பெயர்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மேலும் இரண்டு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராகவாச்சாரி பார்த்தசாரதி, சுதாகர் பெடிரெட்லாவின் பெயர்களை, பாக்., கொடுத்துள்ளது.இந்நிலையில், இந்தியாவை பயங்கரவாத நாடாக காட்ட முயலும், பாக்.,கின் முயற்சிகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் மத்திய அரசு விளக்கி வருகிறது. அதையடுத்து, பாக்.,குக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.