பழங்குடியினர் கௌரவத் திருநாள்

பூர்வகுடி மக்களான பழங்குடியினருக்கே முதல் உரிமை என்ற கண்ணோட்டம் ஆழ்ந்த அர்த்தம் கொண்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த கால காங்கிரஸ் அரசுகளின் போது, பழங்குடியினருக்கு உருப்படியாக எதையும் செய்ததில்லை. ஆனால் செய்ததைப் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். இப்போது இது முற்றிலுமாக கலைந்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி “ஜன்ஜாதிய கெளரவ் திவாஸ்” என்ற பழங்குடியினர் கெளரவத் திருநாளுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளித்து வருகிறார். ஆண்டுதோறும் நவம்பர் 15ம் தேதி “பழங்குடியினர் கெளரவத் திருநாள்” நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பழங்குடியினர் வாழ்வில் விழுமியங்கள் மிகுந்துள்ளன. அவர்களிடையே இம்மண்ணின் மகத்துவத்தைப் போற்றும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தன. பழங்குடியினரைப் போற்றுவதற்காக ஒரு திருநாளை ஏற்படுத்தி அதை வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

 

நவம்பர் 15ம் தேதி பழங்குடியினரின் வாழ்வில் மிகவும் முக்கிய நாளாகும். ஏனெனில் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் நவம்பர் 15 ஆகும். இப்போதைய ஜார்கண்ட் மாகாணத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் பிறந்த பிர்ஸா முண்டா, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆங்கிலேயர்களின் அத்துமீறல்களையும், அட்டூழியங்களையும் எதிர்த்து பழங்குடியினரைத் திரட்டி போராட்டம் நடத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்களை சாகடிப்பது ஆங்கிலேய அரசுக்கு சகஜமானது. இந்த பட்டியலில் பகவான் பிர்ஸா முண்டாவும் இடம் பெற்று விட்டார். எனினும் அவரை பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் குலசாமியாகவே இப்போதும் கொண்டாடி வருகின்றனர்.

பழங்குடியினர் கெளரவத் திருநாளையொட்டி பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போன்றோருக்கு வெவ்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
பழங்குடியினர் கெளரவத் திருநாளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், கண்காட்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த இனிய தருணத்தில் பழங்குடியினரின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பழங்குடி மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
உண்மையிலேயே அரசியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக அதிகாரம் பெற்றவர்களாக பழங்குடியினரை உயர்ந்தோங்க வைக்க வேண்டும் என்பதுதான் இத்திருநாள் கொண்டாட்டத்தின் மையப் பொருளாகும். பகவான் பிர்ஸா முண்டாவின் 150வது பிறந்த நாள் நிறைவையொட்டி இவ்வருடம் பழங்குடியினர் கெளரவத் திருநாள் கொண்டாடப்படுவதால், இதன் சிறப்பு சிகரத்துவம் பெறுகிறது.