கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் ஆகியவை வெவ்வேறானவை என்று கருதப்பட்டாலும் கூட இம்மூன்றும் நெருக்கமான பிணைப்பு உடையவை என்பதை சரித்திர ஆய்வாளர்கள் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றனர். எந்த சமுதாயம் தனது கடந்த காலத்தை உரமாகவும் வரமாகவும் கருதி வருங்காலத்திற்கான உள்ளீட்டை செழுமைப்படுத்துகிறதோ, அதுதான் எழுச்சிகரமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இயங்கும்.
பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களிடையே நம் சார்ந்த பெருமிதங்களை, சிறப்புகளை, உன்னதங்களை எல்லாம் பதியவைக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக நமது கல்வி முறை, மெக்காலே கோட்பாட்டிலிருந்து முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவில்லை என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய மன்றம் (என்.சி.இ.ஆர்.டி) மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு நடத்தி அது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 6,722 பள்ளிக்கூடங்களில் பயிலும் 1,88,647 மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. நாட்டுப்பற்று சார்ந்த, தேசியம் சார்ந்த விவகாரங்களில் மாணவர்கள் தெளிவான அறிவு பெற்றவர்களாக உள்ளனர் என்று கூறமுடியாத நிலை காணப்படுகிறது. 74 சதவீத மாணவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் எப்போது ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படும் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை சுதந்திரப்போராட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரங்களை 55 சதவீத மாணவர்கள் அறியவில்லை.
நாடாளுமன்றம், நீதித்துறை, அரசு போன்றவற்றுக்கிடையிலான பணிப் பகுப்பு குறித்து பெரும்பாலான மாணவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. 55 சதவீதம் மாணவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம்தான் உச்ச நீதிமன்றம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
8ம் வகுப்பு மாணவர்களிடையே பூகோள அறிவியலாவது திருப்திகரமாக இருக்கிறதா என்றால் இசைவான பதிலைச் சொல்லமுடியவில்லை. எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன அவற்றின் கிளை நதிகள் யாவை, அவற்றால் பயன்பெறும் நிலப்பரப்பின் அளவு யாது, எந்தெந்த நதி நீரைப் பயன்படுத்தி எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன போன்றவை பற்றிய விவரங்கள் பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரியவில்லை.
1857ம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போர் நடைபெற்றது. இந்த சுதந்திரப் போராட்டம் பாரதத்தின் எந்தெந்தப் பகுதிகளில் மேலோங்கி இருந்தது என்பது 59 சதவீத மாணவர்களுக்குத் தெரியவில்லை. இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாரதத்தைச் சேர்ந்த எந்தெந்த அரசர்கள் பங்கேற்றனர் என்பது பற்றிய விவரம் 72 சதவீத மாணவர்களுக்குத் தெரியவில்லை.
அஸ்திவாரம் வலுவாக இல்லாதது, மாணவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல; தேசத்தின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.
எனவே, நாட்டுப்பற்று சார்ந்த விஷயங்களை மாணவர்களிடையே வலுவாக பதியவைக்கவேண்டும்.