குழந்தைகள் பள்ளி செல்லும் முன் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை கற்றுக் கொள்வர் பள்ளிக்கூடம் சென்ற பின்பு ஆசிரியர்கள் அந்த குழந்தை
களை வழி நடத்துவர் அதன் மூலம் இந்தக் குழந்தையின் ஒவ்வொரு பருவமும் ஆசிரியர்
களால் செதுக்கப்பட்டு சரி, தவறு சொல்லித் தரப்பட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அமையும்.
படிப்பைத் தவிர திறன் வளர்க்கும் விஷயங்கள் அந்தந்த நேரத்துக்கு தகுந்தார் போல புரிய வைக்கப்படும் வீடுகளில் ஏதாவது தவறு செய்தால் பள்ளியில் சொல்லித் திருத்துவார்கள் என்று விட்டு விடாமல் குழந்தை
களை கண்டிக்க வேண்டும். இதுபோல ஆசிரியர்கள் தன் பங்கையும் பெற்றோர்கள் தங்கள் கடமையையும் சரியாக தரும் போது குழந்தைகளின் வாழ்க்கை மேம்படும். இதுதான் உலக இயல்பு. இதில் ஒன்று சரியாக நடக்கவில்லை என்றாலும் குழந்தைகளை பாதிக்கும் வாய்ப்பு உண்டு..
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று தர வேண்டிய நற்பண்புகள் எவை எனப் பார்த்தால் 1.ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. 2.பிறருடன் பேசும் விதம், 3.சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம், 4.கலாச்சாரம், 5.நடத்தை என்று அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.
நற்பண்புகள் தான் ஒருவனை எந்த நிலையிலும் தலைகுனியவிடாது. எந்த இடத்திலும் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட வைக்கும். யாரையும் தைரியமாக சந்திக்கும் துணிவை தரும். பள்ளியில் மாணவர்களுக்கு தவறாமல் கற்பிக்க வேண்டிய விஷயங்கள்.
தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு இது ஒரு இன்றியமையாத திறன். இந்த ஒரு திறனை மட்டுமே வைத்து வாழ்வில் மிகச் சிறந்த வெற்றி பெற்றவர்கள் பலருண்டு. மாணவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்க்கக்கூடிய எந்த ஒரு சொல்லோ செயலோ ஆசிரியர்
களிடமிருந்து ஒருபோதும் வரவே கூடாது. மாறாக, எவ்வளவு அதிகம் முடியுமோ அந்த அளவிற்கு மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் காரியங்களில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும்.
சுயமாகச் சிந்திக்கும் திறனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ளவேண்டிய கணித சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், தமிழ் செய்யுள்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்துகொள்ளட்டும். மற்ற அனைத்துப் பாடங்களையும் சிந்தித்து உணர்ந்து கற்றுக் கொள்ளச் சொல்லிக்கொடுக்க வேண்டும். எப்போதும் அச்சமின்றிச் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொண்டார்களோ, அப்போதே அவர்கள் சிறப்பான வாழ்விற்கு அடித்தளம் போட்டுவிட்டார்கள் என்று பொருள். சிறந்த முறையில் கேள்வி கேட்டுத் தங்களின் ஐயங்களைப் போக்கி அறிவை விருத்தி செய்து கொள்ளும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும்.
“பாசிட்டிவ் திங்க்கிங்” எனப்படும் நேர்மறைச் சிந்தனையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பல்வேறு சமுதாயப் பிரச்சினைகளின் காரணமாக, வளர்ந்துவரும் பல்வேறு நாடுகளில், குறிப்பாக நம் நாட்டில், எதிர்மறைச் சிந்தனை பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. சரியான வழிகாட்டல் கிடைக்காததால், நம் மாணவர்களும் இளைஞர்களும், இதன் நேரடி விளைவாக, எதிர்மறைச் சிந்தனையாளர்களாகத்தான் உருவெடுக்கிறார்கள். இதற்கு ஒரே மாற்று, அவர்களுக்கு நேர்மறைச் சிந்தனையின் வலிமையைப் போதித்து, அவர்களையும் அந்த வழியில் சிந்திக்கத் தூண்டுவதுதான்.
“உற்சாகமே உன்னத வெற்றிகள்..ஆசிரியர்கள் மாணவ செல்வங்களுக்கு ஒரு தாயாக இருந்து நல்வழிப் படுத்துதலே சமுதாயம் மேம்பட முக்கிய காரணியாக அமைகின்றது.
கட்டுரையாளர் :
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்