பலமுறை பாரதம் முழுதும் பயணித்து பவித்திரமாக்கிய புனிதர்

நூறு ஆண்டு சாதனை

சிருங்கேரி சாரதா பீடம் 35வது பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள், 35 வருடங்கள் பீடாதிபதி; 35 வருடங்கள் விஜய யாத்திரை செய்தவர்!

1917ம் ஆண்டு தீபாவளி அன்று அவதரித்த ஸ்வாமிகள், 13வது வயதில் சன்யாச தீட்சை பெற்றார். 18 வயதிற்குள்ளேயே நிர்விகல்ப சமாதி அடைந்த ஜீவன் முக்தர்! கயிலை இறைவன் காலடி பிறந்து, கர்நாடகத்தில் கால் பதித்தானோ? ஊன் உயிர் கொண்டு வான் உறை தெய்வமே ஜகத்குருவாய் அவதாரம் எடுத்ததோ?

அத்வைதத்தின் பொருளாக விளங்கியவர் – அருள்நோக்கில் கற்பகத் தருவானவர் – ஆத்ம விசாரத்தில் அகிலத்தை அளந்தவர். அபிநவ தீர்த்தர் பற்றி ‘ஹிந்து’ பத்திரிகை எழுதியது, 100 வருடங்களில் கூட செய்ய 35 வருடங்களில் செய்துகாட்டிய குரு என்று!

ஆம்! வேத சாஸ்திரம், தத்துவம், தர்க்கம் இவை ஒருபுறம்! விவசாயம், இயற்கை, கட்டிடக் கலை, புகைப்படக் கலை, இயந்திரங்கள், நீர்வளம், உணவு, வாகனங்கள் என அத்தனை துறையிலும் அபார ஞானம் கொண்டவர்! அதனால் வியந்த நாத்திகரும் விஞ்ஞானியுமான கோவை ஜி.டி. நாயுடு, கோவையில் உள்ள அவரின் கட்டிடத்தில் (அவினாசி சாலை) அரங்கத்திற்கு அபிநவ வித்யா தீர்த்தர் அரங்கம்” எனப் பெயரிட்டதுடன், அதனை ஈ.வெ.ராவால் திறக்கவும் வைத்தார்.

பணம், பதவி இவற்றைப் பாராமல் கருணையின் உருவமாய் நடமாடி அபிநவ தீர்த்தர் அருள் பாலித்த நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!!

– முனைவர்  கணேசன், தென்காசி

 

 

மானஸீக பூஜை

சீடர் : சிலருக்கு, பூஜை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதைச் செய்வதற்குச் சரியான வாய்ப்பில்லை. தியானத்திலேயே காலத்தைக் கழிக்கலாம் என்றால் அவர்களுக்குத் தியானமும் சரியாக வருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மனதை ஒரு நிலைப்படுத்த என்ன செய்யலாம்?

குரு: அவர்கள் மானஸீக பூஜையைச் செய்யலாமே.

சீடர் : மானஸீக பூஜை என்றால் என்ன?

குரு: மானஸீக பூஜை என்றால் மனதால் செய்யப்படும் இறைவனின் பூஜை என்று பொருள். சாமான்யமாகப் பூஜை செய்வதற்குப் புஷ்பம், தூபம், தீபம் போன்றவை தேவைப்படுகிறது. எவ்வாறு வெளிப் பூஜையில் நாம் செய்வோமோ, அந்த உபாசாரங்களை மனதாலேயே கற்பனை செய்து இறைவன் வந்திருக்கிறான் என்று கருதி எல்லா உபசாரங்களும் செய்தால் அதுவே மானஸீக பூஜையாகும்.

சீடர்: மானஸீக பூஜை செய்யும்போது தியான சுலோகங்கள் இவைகள் எல்லாம் எப்படிச் செய்வது?

குரு: ‘இறைவன் நம்முன் வந்திருக்கிறான், அவனை நாம் வரவேற்க வேண்டும், அவனுக்கு ஓர் ஆஸனம் தர வேண்டும்’ எனக்கருதி ஓர் ஆஸனத்தைக் கொடுப்போம். அவன் ஆஸனத்தில் ஆமர்ந்த பிறகு நாம்  மானஸீகமாக அவன் கால் கைகளை அலம்பி, ஆசமனம் செய்யும்படிச் செய்து பிறகு சுத்தமான ஜலத்தைத் தருவோம். அவன் அதை ஏற்றுக் கொள்வான். மேலும் அவனுக்கு ஸ்நானம் செய்து வைப்போம்.

– ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் வழிகாட்டல்

 

ஆன்மநேய ஒருமைப்பாடு

ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள். ஒருமுறை,  காரில் பயணித்துக் கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஓரிடத்தில் கார் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. சாலையில் சென்ற எல்லோருமே அதுபற்றிய பொறுப்பில்லாமல், அவ்விடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். வித்யாதீர்த்தர் வண்டியை நிறுத்தச் சொன்னார். கவிழ்ந்து கிடந்த கார் அருகே சென்றபோது, உள்ளே ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. காரைத் தூக்கினால் ஒழிய, உள்ளே கிடப்பவரை மீட்பது சிரமம் என்பதைப் புரிந்து கொண்ட தீர்த்தர், தன்னுடன் வந்த ஊழியர்களை அழைத்தார். அப்போது சுவாமிக்கு வயது 40 தான். ஊழியர்களை மட்டும் ஏவிவிடாமல், தானும் அவர்களுடன் சேர்ந்து முழு பலத்தையும் சேர்த்து எப்படியோ காரைத் தூக்கிவிட்டார். உள்ளே கிடந்த நபரை, தங்கள் கார் ஒன்றில் ஏற்றினார். அதற்கு முன்னதாக, மடத்து அதிகாரி ஒருவரை ஆம்புலன்ஸ் கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அனுப்பியிருந்தார். காரை ஆம்புலன்ஸ் வரும் ரோட்டிலேயே செல்லும்படி கூறினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். அதன்படியே கார் புறப்பட, எதிரில் வந்த ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்து பிழைத்தும் விட்டார். தன் வாழ்நாளின் இறுதிவரை அவர் அடிக்கடி சுவாமியைத் தரிசிக்கச் சென்றார்.

-இல. தமிழ்செல்வி, ஈரோடு

 

ஹிந்துவை மதமாற்ற முடியாது”

ஹிந்து தனக்கு உரிய சாஸ்திரக் கடமைகளிலிருந்து வழுவினால் அதற்கான பரிகாரம் உண்டு.

ஹிந்துவை தண்ணீர் தெளித்தல் போன்ற எந்த முறையிலும் மதமாற்ற முடியாது. ‘மதமாற்றப்பட்ட’ ஹிந்து, உரிய பரிகாரம் செய்துகொண்டு மதமாற்றமே நடக்காதது போல ஹிந்துவாக நீடிப்பார்.

(இது ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் தெரிவித்துள்ள கருத்து)

 

 

அனைவருக்கும் அருள்

தன்னை மும்பையில் தரிசிக்க வந்த முஸ்லிம் அன்பர் ஒருவருடன் ஸ்வாமிகள் சமஸ்கிருதத்தில் பேசி மகிழ்வித்தார். காரணம், வந்தவருக்கு சமஸ்கிருதம் தெரியும். முன்பு மெக்கா சென்று திரும்பிய சில முஸ்லிம் பக்தர்கள் தன்னிடம் தந்திருந்த இரண்டு வைரக்கற்களை இந்த அன்பரிடம் கொடுத்தார். கொல்கத்தாவிலுள்ள இந்த முஸ்லிம் அன்பரின் தந்தையாரும் ஸ்வாமிகளைப் பார்க்க ஆவலாக இருந்ததாகத் தெரிந்ததும், நான் கொல்கத்தா வந்திருந்தபோது பார்த்திருக்கலாமே?” என்று ஸ்வாமிகள் கூற, அந்த சமயம் என் தந்தையார் மெக்கா சென்றிருந்தார். தாங்கள் வருவது தெரிந்திருந்தால் மெக்கா சென்றிருக்க மாட்டேன் என்று அவர் சொன்னார்” என்று வந்திருந்த முஸ்லிம் அன்பர் தெரிவித்தார்.

(ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் பற்றிய சம்பவங்களின் தொகுப்பிலிருந்து)

 

இந்த ஆண்டு இந்த மகானின் ஜெயந்தி நூற்றாண்டு.  ஜகத்குருவின் அருளாசியினால்  ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷன் சார்பாக  தமிழகம் முழுவதும் புகைப்படக் கண்காட்சி, கவியரங்கம், உரை நிகழ்வு, பஜனை, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள், வினாடி-வினா நடைபெற்று வருகிறது.