பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் விஜயபாரதம் செய்தியாளர் குழுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து…
உங்களைப் பற்றி சொல்லுங்கள்…
என் பெயர் வேல்முருகன். வேல் ஆசான் என்பது மக்களால் வைக்கப்பட்ட பெயர். இப்போது வேல் ஆசான் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் தான் நான் பிறந்த ஊர்.
v உங்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது எப்படி தெரிய வந்தது?
அப்போது சென்னையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். கலை பண்பாட்டு துறையில் இருந்து போன் வந்தது. அதில் என்னைப்பற்றி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்ததாக தெரிவித்தார்கள். நான் ஏதோ நிகழ்ச்சிக்காகத் தான் அழைக்க வந்தார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவர்களிடம் மதுரை பக்கத்திலேயே ஆள் இருக்காங்க, அங்கேயே ஆட்களை வர சொல்கிறேன் என்று பதில் அளித்தேன். நான் சென்னையில் இருப்பதால் நிகழ்ச்சி முடித்து வர மூன்று நாட்கள் ஆகிவிடும் என்றேன். அப்போது அவர்கள் என்னுடைய தனிப்பட்ட விவரங்களை அதாவது நான் எத்தனை ஆண்டுகளாக பறை இசை வாசிக்கிறேன் போன்ற தகவல்களை எல்லாம் கேட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சிக்காக ஏன் இதையெல்லாம் கேட்கிறார்கள் என்று நினைத்தேன். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தேன். கலெக்டர் என்னிடம் உங்களது போட்டோவை பார்த்து ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான் தெரிந்து கொண்டேன் என்றார். மேலும் உங்களுக்கு விருது வழங்குவதற்காக தான் தகவல் கேட்டோம். உங்களுக்கு விருது வழங்கலாம் என்று அனுப்பி விட்டோம் என்றார்.
நான் கலைமாமணி விருதுக்கு தான் விசாரிக்கிறார்களோ என்று எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்க ஆரம்பித்தேன். அதற்குத்தான் நான் விண்ணப்பித்திருந்தேன். நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்தான் என்னிடம் முதலில் இந்தியாவே போற்றும் வகையில் உங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது. அதற்குத்தான் இந்த விசாரணை எல்லாம் என்றார்.
v பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது எப்படி தெரிந்த போது எப்படி உணர்ந்தீர்கள்?
டெல்லியில் இருந்து போன் வந்தது. ஹிந்தியில் பேசினார்கள். அவர்களிடம் சார் எனக்கு ஹிந்தியும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது என்றேன். ஒன்லி தமிழ் என்றேன். பின் மொழிபெயர்ப்பாளரிடம் பேச சொன்னார்கள். அவர்கள் தமிழில் வேல்முருகன் என்ற வேல் ஆசான் நீங்கள் தானா என்று கேட்டார்கள். பத்மஸ்ரீ விருது உங்களுக்கு வழங்க இருக்கிறோம். பெறுவதற்கு விருப்பமா என்று கேட்டார்கள். விருப்பம் ஐயா என்றேன். இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்ட உடனே வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் யாரும் இல்லை. கதவை சாத்திக் கொண்டு மேளத்தை அடித்து சந்தோஷப்பட்டேன். நான் போட்ட ஆட்டத்தில் நாய் குலைக்க ஆரம்பித்துவிட்டது. வந்து கடித்து விடுமோ என்ற பயத்தில் நிறுத்திக் கொண்டேன். அவ்வளவு மகிழ்ச்சியோடு ஆட்டம் போட்டேன்.
அதன் பிறகு நண்பர் ஒருவர் வாழ்த்து சொன்னார். என்ன டி.வி பார்க்கவில்லையா?… இன்று டி.வி முழுவதும் உங்க செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார். அதன் பிறகு தொடர்ந்து போன் வர ஆரம்பித்துவிட்டது. செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்து விட்டார்கள். ஒரே கோலாகலமாகிவிட்டது என்றார். அமைச்சர் முதற்கொண்டு எல்லாரும் தொடர்பு கொள்ள ஆராம்பித்துவிட்டார்கள்.
v பறை இசை உங்களுக்குள் எப்படி வந்தது?
இந்தக் கலை மீது முதன் முதலில் எனக்கு ஆர்வம் வந்தது எப்படி என்றால் அலங்காநல்லூர் கோயில் சாமி சிலை செய்த போது, ஒரு மாதம் வழிபாடு செய்து பறை வாசித்தார்கள். அப்போது தான் முதலில் நான் பறை வாசிப்பு கேட்டேன். எனக்கும் பறை அடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் கேட்டால் அடிப்பாங்களோ என்று பயந்து விட்டேன்.
என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அந்தப் பறை வாசிப்பு சத்தத்தை கேட்டுக்கொண்டு சாமி வந்தது போல் ஆடிவிட்டேன். இதை பார்த்த சேவுகன் வாத்தியார் என் கையில் கட்டையை கொடுத்து அடி என்றார். அந்த அடியை பார்த்த உடனே அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ரொம்ப பிரமாதமா அடிக்கிறாய் என்றார். அதன் பிறகு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னை கூப்பிடுவார். கல்யாணம், இறப்பு, கட்சி ஊர்வலம், காது குத்தல் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். இதை பார்த்த எங்கள் வீட்டில் பிரச்சினையை துவக்கி விட்டனர்.
v உங்கள் குடும்பத்தில் நீங்கள்தான் முதலில் பறை வாசித்தீர்களா?
எனக்கு முன்னாடி என் குடும்பத்தில் எங்க ஐயா அதாவது என் அப்பா தான் பறை வாசித்தார். ஆனால் அவர் சினிமா தியேட்டரில் படம் போடுவதற்கு முன்னால் ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வாசித்தார். சினிமா படம் விளம்பரத்துக்கு ஊர் ஊராக சென்று வாசிப்பார். அப்போது சரியான வருமானம் இருக்காது. கலைக்கான மரியாதை இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கலை மீது எனக்கு இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து இதில் பயணித்தேன். ஆனால் என் வீட்டில் எதிர்ப்பு அதிகமானது. சொந்தக்காரர்கள் எல்லாம் என்னை மதிக்கவில்லை, கேலி செய்தார்கள். பள்ளிக்கு செல்லும்போது எங்கேயாவது கொட்டு சத்தம் கேட்டால் பள்ளிக்கு செல்லாமல் அங்கு சென்று விடுவேன். ஒழுங்காக படிக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டில் திட்ட ஆரம்பித்தார்கள். என் அண்ணன் ஒரு நாள் அடித்தே விட்டான். நான் அடியை வாங்கிக்கொண்டு பயந்து மாமா ஊருக்கு ஓடி விட்டேன்.
பின் சரி படிக்கலாம் என்று ஐந்தாவது முழு பரிட்சை எழுத சென்று கொண்டிருந்தேன். அப்போது அம்பேத்கர் கலை குழுவில் இருந்து மலைச்சாமி அண்ணன் ஓடி வந்து, வேலு திண்டுக்கல்லில் இருந்து பெரிய ஆசான் வந்திருக்கிறார். அவர் பெரிய வாத்தியார். அவரை இப்ப பார்க்கவில்லை என்றால் எப்பொழுதும் பார்க்க முடியாது என்றார். உடனே பரீட்சை அட்டையை தூக்கி வீசிவிட்டு அவரைப் பார்க்க சென்று விட்டேன். அவருடன் சேர்ந்து வாசித்து கூலியும் பெற்றேன். அத்துடன் பள்ளி படிப்பு முடிந்தது.
v பறை வாசிப்பு தொழிலை எப்படி தொடங்கினீர்கள்?
முதலில் சைக்கிள் கடைக்கு வேலைக்கு சென்று விட்டேன். அப்போது எங்கு பாட்டு சத்தம் கேட்டாலும் அடிக்க ஆரம்பித்து விடுவேன். ஒரு நாள் பறை வாசிப்பு சத்தம் கேட்டது. என்னால் உணர்ச்சியை அடக்கவே முடியவில்லை அங்கு சென்று விட்டேன். முதலாளி எங்கே சென்றாய் என்று கேட்டார். அண்ணா வயிறு வலி என்று சொல்லிவிட்டேன். அடுத்து ஒரு நாள் அங்கே ஒரு சாவு. நான் அங்கு சென்று விட்டேன். அங்கே என்னுடைய முதலாளிக்கு தெரிந்தவர் என்னை பார்த்து விட்டார். இதை என்னுடைய முதலாளியிடம் சொல்லிவிட்டார். முதலாளி எங்கே சென்றாய் என்று கேட்டார். அண்ணே காய்ச்சல் என்று சொல்லிவிட்டேன். உன்னை சாவு வீட்டில் பார்த்தேன் என்றார்களே என்றார். காய்ச்சல் போய் விட்ட உடனே அங்கும் சென்று விட்டேன் என்றேன்.
இப்படியே சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் பறையோசை கேட்டு இறுதி ஊர்வலத்தின் பின் சென்றேன். என்னுடைய முதலாளி என்னை பிடித்துக் கொண்டார். அண்ணா சுடுகாட்டு வரைக்கும் போய் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டேன்.
திருமணத்துக்குப் பிறகு என் மனைவி வீட்டுக்கு சென்று விட்டேன். பின் புதிதாக ஒரு அடியை கேட்டால், அதை சுவற்றில் எழுதி வைப்பேன். ஒவ்வொரு அடியாக உள்வாங்கி அதை தெரிந்து கொண்டேன். அப்போது வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் அழகு மலராட என்ற பாடலின் அடியை கேட்ட உடனே நான் அடிக்க ஆரம்பித்து விட்டேன். தொடர்ந்து மேடை நிகழ்ச்சிக்கு போக ஆரம்பித்து விட்டேன். இப்படித்தான் பறை வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.
v வெளியுலகத்துக்கு நீங்கள் பிரபலமானது எப்படி?
முதல் முதலில் நான் பிரபலம் அடைந்தது சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தான். பின் 2008ல் சீனாவுக்கு போக வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 10 நிமிடம் பறை அடித்ததுக்கு ரூபாய் 5,000 கொடுத்தார்கள். அன்று கலெக்டருக்கு கூட ஒரு நாள் சம்பளம் 5,000 இல்லை. இவ்வளவு பெரிய சம்பளம் வாங்க எனக்கு என்ன தகுதி இருக்குது என்று நான் நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு தான் கலைமீது இவ்வளவு பெரிய மதிப்பு இருக்குது என்பதை தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு பாரதம் முழுக்க சென்று பயிற்சி கொடுத்திருக்கிறேன். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறேன். ஒருமுறை அமெரிக்கா சென்று பயிற்சி கொடுத்திருக்கிறேன். இப்படி என்னுடைய அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
v இந்த வேலை செய்வது உங்களுக்கு மன திருப்தி உள்ளதா?
ஒரு ஊரில் என்னுடைய வாசிப்பை கேட்டு பிணத்தை கீழே வைத்துவிட்டு ஆட வந்து விட்டார்கள். அன்று நான் ஜெயித்து விட்டேன் என்று உணர்ந்தேன். ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் வாசிக்க சென்று இருந்தேன். அந்த ஊரில் ஒருவர் தொடர்ந்து அடிக்க சொல்லி அருவாளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். நான் அடிக்க ஆரம்பித்து விட்டேன்.
இதைக் கேட்ட உடனே அவர் ஆட ஆரம்பித்து விட்டார். அப்போது மகுடிக்கு ஆடாத பாம்பும் இல்லை கலைக்கு மயங்காத மனிதர்களும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். நான் பறையை சாமியாக நினைத்து தான் வணங்குகிறேன்.
v பத்மஸ்ரீ விருது உங்களுக்கு கிடைத்தது குறித்து சொல்லுங்கள்?
என்னுடைய இந்த வெற்றியை என் குருநாதர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வாசிக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
v இந்த பறையில் நீங்கள் தான் முதல் விருதை பெறுகிறீர்களா?
பறை இசைக்கு இதுதான் முதல் விருது. இந்த முதல் விருது பறைக்கு கிடைத்த விடுதலை என்று நான் கருதுகிறேன்.
v இதற்கு முன்னாடி ஏதாவது விருது வாங்கி இருக்கிறீர்களா?
தமிழக அளவில் எந்த விருதும் வாங்கவில்லை. மாவட்ட அளவில் ஒரு விருது வாங்கி இருக்கிறேன். நான் வாழ்நாளில் வாங்கிய மிகப்பெரிய விருது இதுதான். இந்த விருதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இது எனக்கு பெருமை இல்லை பறைக்கு தான் பெருமை. கலைக்கு தான் பெருமை. இந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்கவே இல்லை நான் விண்ணப்பித்தது கலைமாமணி விருதுக்கு தான். இந்த விருது எப்படி கிடைத்தது என்று எனக்கே புரியவில்லை.
v இப்போது பறை பயிற்சி கொடுத்து வருகிறீர்களா?
ஆம் பயிற்சி கொடுத்து வருகிறேன். முசோரி சென்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்டவர்களுக்கும் பயிற்சி கொடுத்து இருக்கிறேன்.
v பறை இசையின் சிறப்பு பற்றி சொல்லுங்கள்?
உயிர் பிரிந்த உடனேயே பறை வாசிப்பார்கள். அந்த அடியை கேட்ட உடனே அந்த அதிர்வை கண்டு உயிர் மீண்டும் வந்திருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் இதை வைத்திய பறை என்று அழைக்கிறார்கள். நம் பாரம்பரியத்தில் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒரு அடி இருக்கிறது. நம்முடைய வழிபாடு ஆடி, பாடி கொண்டாடுவது தான். பறைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லை. எப்படி கடவுளும் கல்வியும் பொதுவானதோ அதேபோல கலையும் பொதுவானது. சிவபொருமான் ருத்ரதாண்டவம் ஆடியது இந்த வாசிப்பைக் கேட்டு தான் என்கிறார்கள். சிவனுக்கு இசை நாதன் என்ற பெயரும் உண்டு.