பரமஹம்ஸர் உதயமாக உதவிய உத்தமி மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ சாரதாதேவி வங்காளத்தில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853, டிசம்பர் 22ம் நாள் பிறந்தார். அவருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடைபெற்றது. அப்போது சாரதைக்கு வயது ஐந்து. ராமகிருஷ்ணருக்கு 23. ராமகிருஷ்ணர் குடும்ப வாழ்வில் ஈடுபட விருப்பமில்லாதவராக தக்ஷிணேஸ்வரம் சென்று அங்குள்ள பவதாரிணி கோயிலில் அர்ச்சகராகச் சேர்ந்தார்.


ராமகிருஷ்ணரைத் தேடி சாரதை தனது 20வது வயதில் தக்ஷிணேஸ்வரம் வந்தாள். ராமகிருஷ்ணர் குடும்ப வாழ்வில் ஈடுபட விருப்பமில்லாதவராக ஆன்மிக சாதனா நெறி விரும்புகிறவராகவும் இருக்கிறார் என்ற விபரம் சாரதைக்கு தெரிந்திருந்தது.
சாரதையை அன்புடன் வரவேற்ற ராமகிருஷ்ணர் சாரதையின் மனநிலையை சோதிக்க விரும்பினார்.சாரதை, என்னை உலகியலுக்கு (குடும்ப வாழ்விற்கு) இழுப்பதற்காகவா இங்கே வந்திருக்கிறாய்?” என்றார்.
இதைக்கேட்டு சாரதை சிறிதும் கலங்கவோ தயங்கவோ இல்லை. மாறாக உங்கள் விருப்பத்தை நான் அறிவேன். உங்களுடைய பாதையில் உங்களுக்கு உதவுவதற்காகவே வந்திருக்கிறேன்” என்றாள் சாரதை. சாரதை மட்டும் உறுதியுள்ளவளாக இல்லாமல் இருந்திருந்தால் நானும் புலனின்ப வாழ்வில் சிக்கியிருப்பேன் என்று ராமகிருஷ்ணர் பிற்காலத்தில் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சாரதையின் உள்ளத்தில் சிற்றின்ப விருப்பம் தோன்றாமல் இருக்கட்டும் என்று பராசக்தியிடம் ராமகிருஷ்ணர் வேண்டியது வீண்போகவில்லை.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சீடர்கள் அனைவருக்கும் ‘அம்மா’ ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டினார் அன்னை சாரதா தேவி.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்