சாம்பலை (விபூதி) நெற்றியில் பூசுவது ஏன்?
– எம். பவானி, சேலம்
பெரிய பெரிய மன்னர்களும் கடைசியில் பிடி சாம்பல்தான் என்று சொல்கிற விஷயமே ‘திருநீறு’ தான். ரொம்ப ஆடாதே… அமைதியாக இரு என்பதைச் சொல்லாமல் சொல்வது ‘திருநீறு’.
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்கிறது கம்பராமாயணம். கடன்பட்டவன் கலங்குகிறானா? கடன் கொடுத்தவன் கலங்குகிறானா?
– வி.சேகர், நாமக்கல்
முதலில் இது கம்பராமாயண பாடலே இல்லை. ஒரு பாடல் அவ்வளவுதான். இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவன்தான் அதிகம் கலங்குகிறான்.
திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கினால் செல்வம் கொழிக்குமா?
– ப. ஹரி, கோயம்புத்தூர்
எந்த தெய்வமும் வாரிக் கொடுக்காது. கடுமையான உழைப்பு, நேர்மை இத்துடன் கடவுள் அருள் இருந்தால் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.
தி.மு.கவிற்கு வழக்காட டெல்லி வழக்கறிஞர்களை அழைத்தது ஏன்?
– பெ. வெள்ளைத்துரை, காயாமொழி
வாய்தா வாங்க நம்மூர் வக்கீல், வழக்கு நடத்த டெல்லி கபில் சிபில்? ஏன் நம்மூர் வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கையின்மையா? தி.மு.கவில் கூட தகுதியுள்ள வக்கீல் கிடையாதா?
பாரதியார் நினைவு நாள் என்பது செப்டம்பர் 11 அல்லது செம்படம்பர் 12. எது சரி?
– .ஆர். குமார், நாகப்பட்டினம்
பாரதியார் 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு காலமானார். இரவு 12.00 மணிக்கு மேல் ஆனதால் அதை 12ம் தேதி என்கின்றனர். ஆங்கிலேய காலக்கணக்கீடு இரவு 12.00 மணிக்கு ஒரு நாள் துவங்கும். நமக்கு சூர்யோதயம் தான் ஒரு நாள் துவக்கம். நம் கணக்குப்படி பார்த்தால் செப்டம்பர் 11ம் தேதிதான் சரியானது.
டாக்டர் தமிழிசை சொல்வதுபோல் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதா?
– வே. நந்தா, தர்மபுரி
தமிழகத்தில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக கழகங்கள் தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஊழலில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. தமிழக மக்கள் கழகங்களுக்கு மாற்றாக ஏதாவது ஒரு கட்சி வருமா என்று எதிர்பார்க்கின்றனர். பாஜக அந்த மாற்றத்தைத் தருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நேரத்தை எப்படி திட்டமிடுவது?
– ஆர். கோலப்பன், நாகர்கோவில்
நல்ல செயல்களுக்கு நேரம் இல்லை என்று சொல்கிறவன் நேர்மை அற்றவன். காலம் இல்லை என்று சொல்கிறவன் கணக்குத் தெரியாதவன் என்கிறார் சுவாமி சித்பவானந்தர். நமக்கு 24 மணி நேரம் என்றால் பிரதமர் மோடிக்கும் 24 மணி நேரம் தானே! திட்டமிடுகிறார்… செயல்படுத்துகிறார். நீங்களும் திட்டமிட்டு முயற்சி செய்து பாருங்கள்.