தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வேளாண் துறையின் கோரிக்கையை ஏற்று, இந்த அவகாசத்தை நவ.22-ம் தேதி வரை ஒரு வாரம் நீட்டித்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சம்பா, தாளடிபயிர்களை காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக, பருவமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணை செயலர் ரிதேஷ் சவுகானுக்கு தமிழக வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். அதில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் கடந்த செப்.15-ம்தேதி தொடங்கிய சிறப்பு மற்றும்ராபி பருவத்துக்கான பயிர்களுக்கு காப்பீடு செய்ய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, திருப்பூர்,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களுக்கு நவ.15வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம், போதிய மழை பெய்யாதது, முக்கியமான நீர்த்தேக்கங்களில் போதிய தண்ணீர் இல்லாதது, டெல்டா மாவட்டங்களுக்கு காவிரிநீர் திறக்கப்படாதது ஆகிய காரணங்களால், பயிர் காப்பீடு செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
.
பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனங்களும் இந்த அவகாசத்தை நீட்டிக்க இசைவு தெரிவித்துள்ளன. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை வரும் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை மேலும் ஒரு வார காலம், அதாவது நவ.22-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சிறப்பு நிகழ்வாக, பயிர் காப்பீட்டுக்கான அவகாசம் நவ.15-ல் இருந்து நவ.22 வரை நீட்டிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது. இந்த காலகட்டத்தில் தேசிய பயிர் காப்பீட்டுக்கான இணையம் செயல்பாட்டில் இருக்கும். பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பயிர் காப்பீட்டுக்கான பொது சேவை மையங்கள் நவ.18, 19-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) செயல்படும். எனவே, இதுவரை சம்பா பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவ.22-க்குள் பதிவுசெய்து பயனடையலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.