பயங்கரவாத வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் ஜா, அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமித்ஷா, மாநிலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பார்வை முழுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜோரியில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திப்பதற்காக ஜம்மு பிராந்தியத்துக்கு வந்தேன். ஆனால் மோசமான காலநிலை காரணமாக அங்கு என்னால் செல்ல முடியவில்லை. எனினும் அந்த 7 பேரின் குடும்பத்தினருடனும் தொலைபேசியில் பேசினேன். அப்போது அந்த குடும்பத்தினர் அனைவரும், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து இதுபோன்ற உறுதியான வார்த்தையைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜோரியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணையை நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்துள்ளோம். இதைத்தவிர ஜம்முவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த அனைத்து பயங்கரவாத சம்பவ வழக்குகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கும். இதற்கு தேவையான உதவிகளை காஷ்மீர் காவல்துறை வழங்கும். காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்தன. ஜம்மு பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மூன்று மாதங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.