தமிழகத்தில் எத்தனை எத்தனை படிப்புகள், பட்டங்கள், பட்டயப் படிப்புகள். இவை பற்றித் தெரிந்து கொள்ள நிச்சயம் நமக்கு ஆசையாக இருக்கும். முடிவில், இத்தனை விதமான படிப்புகள் இருந்தும் ஏன் எல்லோரும் இஞ்சினியரிங் என்ற மாயையில் சிக்கிக் கொள்கிறார்களோ என வியப்புதான் மிஞ்சும்.
பிளஸ் 2 முடித்த பின் என்ன செய்வது?
+ 2 படித்து பரீட்சை எழுதி நல்ல மார்க் வாங்கி சந்தோஷமாக கல்லூரிக்கு விண்ணப்பிப்பவர்கள் எத்தனை பேர்? அதிலும் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வி. உண்மையில் இரண்டு விஷயங்கள் தான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது.
- வெளியிலிருந்து வரும் தாக்கம் – எந்த வகை தொழில்கள் செழிக்கிறதோ, அதில் வேலையும் நல்ல சம்பளமும் உறுதி.
- உள்ளிருந்து வரும் தாக்கம் – நமது தனித் தன்மை. இயல்பாகவே பொறுமையும் கருணையும் கொண்டவர்கள் மருத்துவர்களாக, துல்லியமாக வேலையை முடிப்பவர்கள் பொறியாளர்களாக, கலையார்வம் கூடவே இருக்கும் பட்சத்தில் படைப்பு ரீதியான தொழில் என்று ஜெயிப்பது.
வேளாண் கல்வி
கோவை, மதுரை, திருச்சி, கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் என பல இடங்களில் வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த B.Sc அக்ரி, B.Sc ஹார்ட்டிகல்ச்சர், B.Sc ஃபாரஸ்ட்ரி, B.Sc ஹோம் சயின்ஸ், B.Tech அக்ரி இஞ்சினியரிங், B.Tech பயோடெக்னாலஜி, B.Tech ஃபுட் ப்ராசசிங் என பல்வேறு விதமான தொழில் படிப்புகள் இருக்கின்றன.
குறிப்பாக, ஃபுட் ப்ராசசிங் படித்து விட்டு, வேலை தேடி அலையக் கூடாது. தொழில் செய்வது எப்படி எனத் தெரிந்துகொண்டு, அரசு கதறிக் கதறி அழைக்கிறதே அவ்வாறு தொழில் செய்ய, முதலாளி ஆகி விடவேண்டும். அப்படி ஆவது புனர்ஜென்மம் போல்தான். முதல் போடுவது லோன் பெறுவது, அளவாக தேவைக் கேற்ப செலவு செய்வது, தேவையான ஆட்களை எடுத்து திறன் மேம்பாடு தருவது… என்று எத்தனையோ விஷயங்கள் உள்ளன. தக்காளியை ‘சாஸ்’ ஆக்கி விட்டால் உங்களுக்கு தொழில், விவசாயிக்கு லாபம், தொழிலாளிக்கு வருஷம் பூராவும் வேலை, சம்பளம், வேலைக்கு அவசரமாய் கிளம்பும் அம்மாவுக்கு குட்டிப் பையனை சாப்பிட வைக்க உபாயம் – ஒரே கல்லில் எத்தனை மாங்காய்!
ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படிப்புகள்
இந்தியாவிலேயே முதல் அரசு பல்கலை உடற்கல்வி, விளையாட்டு துறையில் – தமிழகத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. B.Sc உடற்பயிற்சி, உடற்கல்வி; 3 வருட கோர்ஸ். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, டிகிரி முடித்தவர்களுக்கு Ph.D in யோகா, –. M. Phil உடற்கல்வி, உடற்கல்வி + நியூட்ரிஷன், M.Sc ஸ்போர்ட்ஸ் பயோமெகானிகஸ் + கினசியாலஜி என எத்தனை வகையான படிப்புகள் இருக்கின்றன. ஆச்சர்யமாக உள்ளது! விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இவற்றைப் பயின்று புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க உதவலாம்.
டிப்ளமா படிப்புகள்
படிப்பு சுமாராகத் தான் வருகிறது என்பதை 12 படித்து முடிக்கும் முன்போ அறிந்திருந்தால் யோசிக்காமல், டிப்ளமாவில் சேர்த்து விடலாம். எப்ப பார்த்தாலும் DEE, DCE என்றுதான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பது இல்லை பியூட்டிஷியன், கேட்டரிங் அஸிஸ்டென்ட், DTP ஆபரேட்டர், ஃபாஷன் டிசைனிங், கார்மென்ட்ஸ் தயாரிப்பு, 4 சக்கர வாகனங்களை ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக், சுகாதார உதவியாளர், வீட்டு எலக்ட்ரீஷியன், மெடிக்கல் லாப் டெக்னீஷியன், ப்ளம்பிங் இப்படி எண்ணற்ற படிப்புகள் டிப்ளமாவில் இருக்கிறது. ஏசி மெக்கானிக், செல்ஃபோன் ரிப்பேர், எது செய்யத்தான் ஆள் தேவையில்லை இங்கு?
சான்றிதழ் படிப்புகள்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சுற்றுச்சூழல், உணவு, ஊட்டச்சத்து, கிராமப்புற வளர்ச்சி, அக்கவுண்டிங் ஸாப்டுவேர், பிரைமரிபள்ளி கணக்குப் பாடம் என பல்வேறு வகையான சான்றிதழ் படிப்புகள் குவிந்துள்ளன. நாம் தான் நம் திறமைக்கும் தேவைக்கும் ஏற்ற மாதிரி கோர்ஸ் எடுத்துப் படிக்க வேண்டும். கூடுமானவரை அந்த ஏரியாவிலேயே வேலை வாங்குவதுதான் உத்தமம். அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் படித்து விட்டு, தினமும் ஒரு கடையில் போய் 8 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்து சம்பளம் வாங்க வேண்டும் என சிறு டவுண் பெண்கள் நினைக்கலாகாது. சூழ்நிலை பெரிய நகர்ப்புறம் மாதிரி அதிகம் வேலை, அதிக சம்பளம் என்பது டவுண் கடைகளுக்கு கட்டுப் படியாகாது. அதனால் என்ன? வேலையை மூன்று நான்கு கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டில் கணினியில் செய்து அனுப்பி விட்டால் போகிறது. தினமும் ஒரு மணி நேரம் வேலை; அதற்கேற்ற சம்பளம் – 4 இடங்களில் வருமானம் என்றால் சந்தோஷம் தானே?
பொதுவாக, உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். என்ன இருக்கிறது என்று ஹோட்டலில் விசாரிப்பது போல் கேட்கிறார்கள். உங்களுக்கு என்ன வேலை செய்யப் பிடிக்கிறது என்றால், என்ன விதமான வேலைகள் இருக்கிறது, சொல்லுங்கள்” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்காக :
* விவசாயம் * மாற்று சக்தி * ஆடை * மோட்டார் வாகன உதிரி பாகங்கள் * விமான போக்குவரத்து, விண்வெளி * வங்கி, நிதி சேவைகள் * அழகு, ஆரோக்கியம் * கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள் * மூலதன பொருட்கள் கெமிக்கல்கள் & மருந்துகள் * கல்வி, திறன் மேம்பாட்டு சேவைகள் * எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி ஹார்டுவேர் * இஞ்சினியரிங் * தொழில் முனைவோர் திறமைகள் * உணவு பதப்படுத்துதல், குளிர் சங்கிலி, குளிர் பதனம் * மரச்சாமான்கள் & அலங்கரிப்பு பொருட்கள். * ஜெம்ஸ், நகைகள் செய்தல் என பல நூறு வகையான பட்டயப் படிப்புகளை மத்திய அரசே, ‘பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா’ மூலம் தமிழகம் எங்கும் பல பயிற்சிகள் இளைஞர்களுக்காக நடத்துகிறது. கற்றுக் கொண்டு பயன்பெறுவது நம் கையில் தான் உள்ளது.