”லோக்சபா தேர்தலில், பஞ்சாபில் ஆம் ஆத்மி — காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட இரு கட்சிகளும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில், இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இல்லை,” என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதியிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்தார். இதை, மூத்த காங்., தலைவரும், பஞ்சாப் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா வரவேற்றுஉள்ளார்.
”மாநிலத்தில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் காங்., — ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலில் மட்டும் இணைந்து போட்டியிட்டால் சரியாக இருக்காது. ”இது, பஞ்சாபில் பா.ஜ., மற்றும் அகாலி தளத்துக்கு சாதகமாக அமைந்துவிடும்,” என தெரிவித்தார்.
இந்நிலையில், மூத்த காங்., தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி வீட்டுக்கு நேற்று மதிய உணவுக்கு சென்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அதன் பின் நிருபர்களிடம் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. டில்லியில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்.,குடன் பேசி வருகிறோம்.ஏழு லோக்சபா தொகுதி
இங்கு இணைந்து போட்டியிடாவிட்டால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது.