பசுவை அடிப்படையாகக் கொண்ட தொழில்களின் உலகளாவிய கூட்டமைப்பின் (ஜி.சி.சி.ஐ) நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘பசுவை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளின் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் இப்போது களத்தில் யதார்த்தமாகியுள்ளது. இத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை நிறுவியதற்கு பசு சார்ந்த தொழில்களின் உலகளாவிய கூட்டமைப்புக்கு பாராட்டுகள். பசுக்களின் முக்கியத்துவத்தை உலகம் தற்போது உணர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காலம், நமது நோய் எதிர்ப்பு சக்திகளை வள்ர்த்துக்கொள்ளும் வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பால், நெய் மற்றும் பிற பசுமாடுகள் சார்ந்த பொருட்களை உலகம் தேர்வு செய்ய துவங்கியுள்ளது. இந்த தொழில்முனைவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய பாரதத்தில் இத்துறையில் பணிபுரிபவர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர், பாராட்டப்படுகின்றனர். 4,000 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கால்நடை ஆம்புலன்ஸை அழைக்க 1962 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும், இது இந்தத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் 21 சதவீத பங்களிப்பை பாரதம் வழங்குகிறது. பாரதத்தின் பால் உற்பத்தித் துறையின் வினியோக சங்கிலியின் செயல்திறன் உலகிலேயே சிறந்தது’ என கூறினார். உலகம் முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் இந்த ஆன்லைன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.