பங்களாதேஷூக்கு அஸ்ஸாம் முதல்வர் கண்டனம்

பங்களாதேஷில் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அங்குள்ள இடைக்கால அரசு, ஜனநாயக ரீதியானது அல்ல. இந்த இடைக்கால அரசின் ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். அவரது கடந்த கால செயல்பாடு பாரதத்துக்கு அனுசரணையானது அல்ல. நிகழ்கால நடவடிக்கையும் அதைப்போலவே உள்ளது.

வடகிழக்கு பாரதம் நிலத்தால் சூழப்பட்டுள்ள பகுதி. வடகிழக்கு பாரதத்துக்கு கடல்சார்ந்த தொடர்பு வேண்டும் என்றால் அதற்கு பங்களாதேஷ்தான் உதவ முடியும் என்று அண்மையில் முகமது யூனுஸ் தெரிவித்திருந்த கருத்து வடகிழக்கு பாரதத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா, முகமது யூனுஸின் கருத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

சர்மா கூறியதாவது: பாரதத்தின் பிற பகுதிகளோடு வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமானால் கோழிக் கழுத்து கோட்டம் வாயிலாகவே தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. இப்போது இந்த நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. ஆனால் மேலும் அதிக மாற்றங்கள் தேவைப்படுகின்றன. போக்குவரத்து, உட்கட்டமைப்புச் சார்ந்த வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

சாலைப் போக்குவரத்தையும், ரயில் போக்குவரத்தையும் விரிவாக்க வேண்டும். கோழிக்கழுத்து கோட்டம் மட்டுமே இணைப்புக்கான வழியாக உள்ளது என்ற நிலை முழுமையாக மாறினால்தான், வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்தோங்குவது துரிதமடையும்.

வடகிழக்கு மாநிலங்கள் மலைப்பாங்கானவை. எனவே ரயில் தண்டவாளங்களை அமைப்பதும், சாலைகளை நிர்மாணிப்பதும் எளிதல்ல. இது பொறியாளர்களுக்கே சவால் விடக் கூடியதுதான். ஆனால் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முனைப்புடன் செயல்பட்டால் இதை சாத்தியப்படுத்த முடியும்.

முகமது யூனுஸின் கருத்து பூகோள அரசியல் சார்ந்த விஷமத்தனமான உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இதை பாரதம் ஒருபோதும் ஏற்காது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தையும் மேம்படுத்த வாய்ப்புள்ளது. இதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எந்த வெளிநாட்டையும் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் பாரதத்துக்கு இல்லை. பாரதம் போக்குவரத்து ரீதியாகவும், தகவல் தொடர்பு ரீதியாகவும் தற்சார்புடன் இயங்கி வருகிறது. இவ்வாறு ஹிமந்த் பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் இயங்கிவரும் திப்ரா மோத்தாவின் தலைவர் பிரதியோத் தேப்பர்மா கூறியதாவது: வடகிழக்கு பாரதம் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பாரதத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பை தொடர்ந்து நல்கி வருகின்றன. மத்திய அரசும் இதை நன்கு உணர்ந்து கொண்டு கவனம் செலுத்தி வருகிறது. வேறு எந்த அன்னிய நாட்டின் தயவையும் வட கிழக்கு மாநிலங்கள் நாடவில்லை. பாரதத்தின் மைய நீரோட்டத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களை அப்புறப்படுத்தி விடலாம் என்று யாரேனும் பகல் கனவு கண்டால் பலிக்காது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி